×

இந்த வார விசேஷங்கள்

பானுசப்தமி
9.7.2023 – ஞாயிறு

இன்று சப்தமி திதி, பூரட்டாதி மற்றும் உத்திரட்டாதி நட்சத்திரம். ஞாயிற்றுக்கிழமை. ஆனி மாதம். எவ்வளவு ஒரு பொருத்தமான நாள் என்பதை நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். ஞாயிற்றுக்கிழமையும், சப்தமி திதியும் இணைந்து வந்தால் அது ஒரு சிறப்பான நாள். அன்றைக்கு சூரியனை வணங்க நமது பாவங்களையெல்லாம் சுட்டெரிப்பான். அந்த நாளை நினைத்தால் போதும் மங்களங்கள் சேரும். பானு-சூரியன் சப்தமி-ஏழாவது திதி. ஏழு என்பது உயந்த எண். ஏழு ஸ்வரம். ஏழு நாள். ஏழு உலகம். ஏழு பிரகாரம். ஏழு மலை. இப்படி எழின் பெருமை அளவிட முடியாதது. அதைப் போல ஏழாவது திதி சப்தமி. எல்லாரும் செய்யக்கூடிய நல்ல பலன்களைத் தரக்கூடிய வழிபாடு.

காலையில ஆறு மணிக்குள் நீங்கள் எழுந்து நீராடி ஏதேனும் ஒரு நிவேதனத்தை வைத்து சூரியனை கிழக்கு நோக்கி நின்று வணங்க வேண்டும். பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து பெருமாளை நினைத்து இந்த பாசுரத்தைச் சொல்லவும். அற்புதமான பாசுரம்.

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர் ஆழி நீங்குகவே என்று

இப்பாசுரத்தைச் சொல்லி வணங்குவதால் மலைபோல் இருக்கக் கூடிய துன்பங்களும் விலகி விடும். இது காலையில் சொல்ல வேண்டிய பாசுரம். மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு ஒரு விளக்கு வைத்து (வாசலில் ஒரு விளக்கு) சூரிய பகவானை நினைத்து ஒரு பாசுரம் பாட வேண்டும். என்ன பாசுரம்.

அன்பே தகளியா ஆர்வமே நெய் ஆக,
இன்பு உருகு சிந்தை இடு திரியா, நன்பு உருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்.

அன்பு தான் அகல். ஆர்வம் தான் நெய்.உருகும் மனம் திரி. மனம் உருகினால் விளக்கு எரியும். இதன் பலனாக எம்பெருமானுடைய பரிபூரண அருள் கிடைக்கும். இன்று நீங்கள் அவசியம் இந்த பானு சப்தமியை கொண்டாட வேண்டும். விளக்கேற்றி வைத்து சூரியநாராயணரை வணங்குங்கள். நல்லது நடக்கும்.

கலிக்காம நாயனார் குரு பூஜை
10.7.2023 – திங்கள்

கலிக்காம நாயனார் குருபூஜை இன்று. அறுபத்தி நான்கு நாயன் மார்களில் ஒருவர். ஏயர்கோன் கலிக்காம நாயனார் வேளாண் குடியில் அவதரித்த சிவநெறிச் செல்வர். சிவபக்தியில் உயர்ந்தவர். திருமங்கலம் என்னும் தலத்தில் அவதரித்தவர். திருப்புன்கூர் என்ற திருத்தலத்தில் உள்ள பெருமாளுக்கு பல திருப்பணிகள் புரிந்தவர். இவர் மற்றொரு நாயனார் ஆன மானக்கஞ்சாறர் மகளை திருமணம் செய்து கொண்டவர்.

சுந்தரமூர்த்தி நாயனாருக்காக பரவையாரிடம் சிவபெருமான் தூது சென்ற செய்தியைக் கேள்விப்பட்டு மிகவும் மனம் வருந்தினார் கலிக்காம நாயனார். சுந்தரமூர்த்தி நாயனார் செயலை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் சுந்தர மூர்த்தி நாயனார் மீது கோபமாகவே இருந்தார். இதனை அறிந்து கொண்ட சுந்தரமூர்த்திநாயனார் கலிக்காம நாயனார் கோபத்தை தீர்க்க வேண்டும் என்று திருவாரூர் ஈசனிடம் மனமுருகி வேண்ட, இவர்கள் இருவரையும் இணைத்து வைக்க வேண்டிய ஈசன் ஒரு திருவிளையாடல் செய்தார்.

கலிக்காம நாயனார் வயிற்றில் சூலை நோய் தந்து சுந்தரமூர்த்தி நாயனாரைப் போய் அதைத் தீர்த்து வைக்கச் சொன்னார். அதன் மூலமாக இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நட்பாகலாம் என்று நினைத்தார் ஆனால் சுந்தரமூர்த்தி நாயனாரிடம் மிகுந்த கோபத்தோடு இருந்த கலிக்காம நாயனார் அவரைச் சந்திக்க விரும்பாமல் தன்னுடைய வயிற்றில் கத்தியால் கீறி வாழ்வை முடித்துக்கொண்டார். கலிக்காமர் இறந்ததைக் கண்டு அவர் மனைவியார் உயிர்விடத் துணிந்த பொழுது சுந்தரமூர்த்தி நாயனார் வருகையை அறிந்து கணவர் உயிர்துறந்த செய்தியை மறைத்து நம்பியாரூரரை எதிர்கொள்ள தம் சுற்றத்தாரை அனுப்பினார்.

அப்பொழுது சுந்தரமூர்த்தி நாயனார் கலிக்காமரைத் தான் சந்திக்க வேண்டும் என்று சொல்ல அவர் உள்ளே உறங்குகிறார் என்று உறவினர்கள் தெரிவிக்க, சுந்தரர் மனம் ஒப்பவில்லை. அவருக்கு ஏதோ நடந்திருக்கிறது; அவரை நாம் பார்க்க வேண்டும் என்று சுந்தர மூர்த்தி நாயனார் வற்புறுத்த, அவர்கள் கலிக்காமர் இருந்த அறைக்குள் சென்று காட்டினர். அங்கே கலிக்காமர் குடல் சரிந்து கிடப்பதை கண்ட சுந்தரர், ‘‘என்னைப் பார்க்க மனமின்றி இவர் இறந்தாரா? இதுவன்றோ அசல் சிவ பக்தி.

இவர் வாழ்வு முடிய நான் காரணமாகலாமா? இவரைப் பார்க்க முடியாத நானும் இப்பொழுதே உயிர் துறப்பேன் என்று தம்முடைய கையில் உள்ள வாளை எடுத்து தன்னை மாய்த்துக்கொள்ள முயலும் போது இறைவன் அருளால் கலிக்காமர் உயிர் பெற்று எழுந்தார். ‘‘சுந்தரமூர்த்தி நாயனாருடைய வாளைப் பிடித்துக் கொள்ள ஆரூரர் விழுந்து வணங்கினார். கலிக்காமரும் நம்பியாரூரர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார்.

இருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு நண்பர்கள் ஆயினர். இருவரும் இணையாக சென்று திருப்புன்கூர் பெருமான் திருவடிகளை வணங்கிப் போற்றினார்கள் பின் திருவாரூர் சென்று பெருமானை வழிபட்டனர். அமங்கலம் நேர்ந்த இடத்தும் சிவத்தொண்டர் வந்தால், அவரை மங்களமாக எதிர்கொண்டு வரவேற்று உபசரித்தல் முறைமை என்பதை உணர்ந்தவர் கலிக்காம நாயனாரின் மனைவியார்.

சர்வ ஏகாதசி மற்றும் கார்த்திகை விரதம்
13.7.2023 – வியாழன்

இன்று குரு வாரம். கார்த்திகை விரதம் இருக்க வேண்டிய நாள். முருக பக்தர்கள் இன்று முழுவதும் கார்த்திகை விரத உபவாசம் இருப்பார்கள். அதே சமயம் இன்று ஏகாதசி தினமாக இருப்பதால் ஏகாதசி விரதத்தையும் கடைபிடிப்பார்கள். விரதங்களில் தலைசிறந்த விரதமாக ஏகாதசி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. அதை வைஷ்ணவர்கள் மட்டுமல்லாமல் எல்லோருமே கடைப்பிடிக்கிறார்கள். அதுவும் குருவாரத்தில் திருமங்கையாழ்வார் அவதரித்த கார்த்திகையில், பெருமாளுக்கு உரிய புதன் ராசி மாதமான ஆனி மாதத்தில் வருவது சிறப்பு. இன்று சீர்காழிக்குப் பக்கத்தில் உள்ள திருவாலித் திருநகரியில் திருமங்கை ஆழ்வாருக்கு விசேஷமான திருமஞ்சனம் நடைபெறும்.

இனி, இந்த ஏகாதசியின் சிறப்பைப் பார்ப்போம். மாந்தாதா என்ற ஒரு அரசன் நன்றாக ஆண்டு கொண்டிருந்தான். ஒரு முறை மழை பொய்த்துப் போனது.பயிர்கள் காய்ந்து வாடின. கால்நடைகள் தண்ணீருக்குத் தவித்தன. மக்கள் உணவின்றி கொடும் பஞ்சத்திற்கு ஆளானார்கள். மாந்தாதா ஆங்கீரஸ முனிவர் என்ற முனிவரைச் சந்தித்தான். மக்கள் படும் இன்னல்களைச் சொல்லித் தீர்வு கேட்டான் ஆங்கீரஸ முனிவர் மன்னனைக் கருணையோடு பார்த்தார்.

‘‘உன்னுடைய அன்பு உள்ளத்திற்கு நாட்டிலே நிச்சயம் மறுபடியும் மழை பெய்யும். நான் ஒரு விரதம் சொல்லுகிறேன். இம்மாத வளர்பிறை ஏகாதசியை அனுசரி. இந்த ஏகாதசிக்கு சயன ஏகாதசி என்று பெயர். வழக்கமாக ஏகாதசியை விட, சக்தி வாய்ந்தது. மன்னன் விரதமிருந்து நல்வாழ்வை அடைந்தான். இந்த ஏகாதசியால் இழந்தது எல்லாம் மறுபடியும் கிடைத்துவிடும். சன்னியாசிகள் சாதுர்மாஸ்ய விரதம் துவங்கக் கூடிய காலக் கட்டத்தில் வருகின்ற ஏகாதசி.

பித்தளை, வெள்ளியால் செய்யப்பட்ட விளக்கை, ஒரு தட்டின் நடுவில் வைத்து, விளக்கில் நெய் ஊற்றி, திரியிட்டு, தீபம் ஏற்றி, வேதம் கற்றவருக்குப் தானமாகப் தந்தால், ஞானமும் செல்வமும் கிடைக்கும். வழக்கம்போல முதல் நாளாகிய தசமி திதி அன்று இரவு உணவை தவிர்த்து விடவேண்டும். மறுநாள் காலையில் நீராடி, பெருமாளை வணங்க வேண்டும். விஷ்ணு சகஸ்ரநாமம் முதலிய நூல்களைப் பாராயணம் செய்ய வேண்டும். மாலை திருமால் ஆலயத்துக்குச் சென்று வணங்கி வலம் வர வேண்டும். அப்படிச் செய்வதன் மூலமாக ஏகாதசியின் முழுப் பலனையும் நாம் அடைய முடியும்.

ஆண்டாள் ஆடிப்பூரம் உற்சவம் துவக்கம்
14.7.2023 வெள்ளிக்கிழமை

தென் தமிழ் நாட்டிலே பிரசித்தி பெற்ற வைணவத் தலம் ஸ்ரீவில்லிபுத்தூர். 12 ஆழ்வார்களில் இரண்டு ஆழ்வார்கள் அவதாரத்தலமாக அமைந்த சிறப்பு இந்த ஒரு ஊருக்கு மட்டுமே உண்டு. அதுவும் இரண்டு ஆழ்வார்களும் தந்தையும் மகளுமாக இருப்பது அதைவிட சிறப்பு. மூன்றாவது சிறப்பு மகளாக அவதரித்தவர் சாதாரண மானிடப் பெண் அல்ல; பூமாதேவியே என்பது சிறப்பு. அந்தப் பெண்ணை பெருமாளே திருமணம் செய்து கொண்டார் என்பது அதைவிடச் சிறப்பு. பூமா தேவி துளசிச் செடியின் அடியிலே ஒரு பெண்ணாக அவதரித்து பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்டார்.

அவள் சூடிய மாலையைத் தான் பெருமாளே விரும்பிச் சூடினார் என்பதால் அவளுக்கு சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று பெயர். பகவானை பக்தியாலும் தமிழாலும் ஆண்டதால் ஆண்டாள் என்று பெயர். அவள் அவதரித்த மாதம் ஆடி மாதம், பூர நட்சத்திரம்.

கர்கடே பூர்வ பல்குன்யாம் துளஸீகான
நோத்பவாம்
பாண்ட்யே விஸ்வம்பராம் கோதாம்
வந்தே ஸ்ரீரங்கநாயகீம்

என்ற மங்கள சுலோகம் இதை விளக்குகிறது. ஒவ்வொரு வருடமும் ஆண்டாளின் அவதார உற்சவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரம்மோற்சவமாக கொண்டாடப்படும். அந்த உற்சவத்தில் ஐந்து கருட சேவையும், ஆண்டாள் திருத்தேர் உற்சவமும் மிக விசேஷமானவை. ஒவ்வொரு நாளும் நடைபெறும் விசேஷமான திருமஞ்சனமும், பகலிலும், இரவிலும் வெவ்வேறு வாகனங்களில் நடக்கும் வீதி உலாவும் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். தினசரி விழாவில் ஆயிரக்கணக்கான மக்களும், கருட சேவையிலும் உற்சவத்திலும் திருத்தேர் உற்சவத்திலும் லட்சக்கணக்கான மக்களும் இங்கு கூடுவார்கள். அந்த பிரம்மோற்சவத்தின் துவக்க நாள் இன்று.

தொகுப்பு: விஷ்ணுபிரியா

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Panusapthami ,Sapthami Didi ,Purattadi ,Utrattadi ,Dinakaran ,
× RELATED தெளிவு பெறுவோம்