×

₹2000 நோட்டுகளை தருவதாக அழைத்து மாஜி கடற்படை அதிகாரிகளை மிரட்டி ₹15 லட்சம் பறித்த பெண் இன்ஸ்பெக்டர்

*ஆந்திராவில் நூதன மோசடி

திருமலை : ₹2000 நோட்டுகளை தருவதாக கூறி அழைத்து, மாஜி கடற்படை அதிகாரிகளை மிரட்டி ₹15 லட்சம் பறித்து நூதன மோசடியில் ஈடுபட்ட பெண் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.ரிசர்வ் வங்கி ₹2 ஆயிரம் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ள நிலையில் அதனை மாற்றி கொள்ள செப்டம்பர் வரை கால அவகாசம் வழங்கி உள்ளது. இந்நிலையில் அதை தங்களுக்கு சாதகமாக மாற்ற சிலர் அனைத்து விதத்திலும் முயற்சித்து மோசடி செய்து வருகின்றனர். இதுபோன்ற மோசடிகளை தடுக்க வேண்டிய போலீசாரே மோசடி செய்து மிரட்டி பணம் பறித்த சம்பவம் விசாகப்பட்டினத்தில் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ஆயுதப்படையில் இன்ஸ்பெக்டராகவும், போலீஸ் அதிகாரிகள் சங்கத்தின் துணை தலைவராகவும் இருப்பவர் சுவர்ணலதா. இவர் ₹500க்கு அதிகளவில் ₹2000 நோட்டுகளை மாற்றி தருவதாக கூறி, மோசடி செய்து பணம் பறிக்க திட்டம் தீட்டினார். இதற்காக தனக்கு கீழ் பணி புரியும் ஊர்காவல் படையை சேர்ந்த மேகர், சீனு ஆகியோருடன் புரோக்கர் சூர்யா என்பவருடன் சேர்ந்து திட்டம் தீட்டி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

சுவர்ணலதா ₹90 லட்சத்திற்கு ₹500 ரூபாய் நோட்டாக கொடுத்தால், ₹2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக ₹1 கோடி தருவதாக சிலரை நம்ப வைத்து, அவர்களை அழைத்து வரும்படி கூறினார். அதன்படி புரோக்கர் சூர்யா விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் கொல்லி ஸ்ரீனு மற்றும் ஸ்ரீதர் ஆகியோரிடம் ₹90 லட்சத்துக்கு 500 ரூபாய் நோட்டுகள் கொடுத்தால், ₹2000 நோட்டுகளாக ₹1 கோடி தருவதாக கூறி உள்ளார்.

இதனை நம்பிய அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு பணத்துடன் காரில் வந்தபோது, ஏற்கனவே திட்டமிட்டபடி ஊர்காவல் படையினர் மேகர், சீனு அங்கு சென்று முன்னாள் கடற்படை அதிகாரிகளின் காரை மடக்கி, இந்த பணம் திருட்டு, கொள்ளை அடித்த பணமா என மிரட்டினர். அப்போது அங்கு வந்த இன்ஸ்பெக்டர் சுவர்ணலதா வழக்கு இல்லாமல் விட வேண்டும் என்றால் ₹15 லட்சம் தர வேண்டும், இல்லாவிட்டால் வழக்குப்பதிவு செய்வதாக மிரட்டி பணத்தை பெற்றுள்ளார்.

இதனால் பணத்தை இழந்த கடற்படை அதிகாரிகள் கொல்லி ஸ்ரீனு மற்றும் ஸ்ரீதர் இதுகுறித்து விசாகப்பட்டினம் காவல் ஆணையர் திருவிக்ரம் வர்மாவிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து விசாரனை மேற்கொண்ட காவல் ஆணையர் திருவிக்ரம்வர்மா சுவர்ணலதா திட்டமிட்டு ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து துவரகா நகர் காவல் நிலையத்தில் சுவர்ணலதா, டிரைவர் மேகர், ஊர்காவல் படை வீரர் ஸ்ரீனு, புரோக்கர் சூர்யா ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து 4 பேரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

The post ₹2000 நோட்டுகளை தருவதாக அழைத்து மாஜி கடற்படை அதிகாரிகளை மிரட்டி ₹15 லட்சம் பறித்த பெண் இன்ஸ்பெக்டர் appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh Tirumala ,
× RELATED ஓட்டலாக மாற்ற கொண்டு சென்றனர்...