×

பரமத்திவேலூர் அருகே பரபரப்பு கொதிக்கும் எண்ணெயை எடுத்து தலை மீது ஊற்றிக்கொண்ட நபர்-மருத்துவமனையில் அனுமதி

பரமத்திவேலூர் :நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பஸ் நிலையம் அருகே நேற்று பகல் 12 மணியளவில் 55 வயது மதிக்கத்தக்க நபர், சாலையோரம் அமர்ந்து அங்கிருந்த கூரான கற்களை எடுத்து தனது கை கால்களை குத்தி கிழித்துக்கொண்டார். இதனால் ரத்தம் சொட்டியதை பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவமனையில் இருந்து அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த அந்த நபர் அரசு மருத்துவமனை அருகே உள்ள சாக்கடையில் குதித்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை அங்கிருந்து விரட்டியடித்தனர். அங்கிருந்து சென்றவர் மீண்டும் இரவு 9 மணியளவில், பரமத்திவேலூர் பஸ் நிலையம் அருகே பிரியாணி கடைக்கு வந்துள்ளார். அங்கு சில்லி சிக்கன் போடுவதற்காக அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணெயை எடுத்த அவர், தனது தலையில் ஊற்றிக் கொண்டார்.

யாரும் எதிர்பாராத நேரத்தில் நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதியில் இருந்தவர்கள் தெறித்து ஓடினர். கொதிக்கும் எண்ணெயை ஊற்றிக்கொண்டதால் சூடு தாங்காமல் அலறி துடித்தார்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, அந்த நபர் நாமக்கல்லை அடுத்துள்ள ரெட்டிபட்டியைச் சேர்ந்த கருப்பண்ணன் (55) என்பது தெரிய வந்தது.இவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா அல்லது குடிபோதையில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பரமத்திவேலூர் அருகே பரபரப்பு கொதிக்கும் எண்ணெயை எடுத்து தலை மீது ஊற்றிக்கொண்ட நபர்-மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Paramathivelur ,Namakkal District ,Paramativelur Bus Station ,Paramativelur ,Dinakaran ,
× RELATED பரமத்திவேலூரில் போலீஸ் அதிரடி...