×

வலங்கைமான், குடவாசல் பகுதி விவசாயிகள் அரசு குறுவை தொகுப்பில் சேர்ந்து பயனடையலாம்

*வட்டார வேளாண் அதிகாரி அழைப்பு

வலங்கைமான் : குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் என்று வலங்கைமான் மற்றும் குடவாசல் வட்டார விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன் அழைப்பு விடுத்துள்ளார்.டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடி மேற்கொள்ளும் வகையில் நடப்பு ஆண்டில் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் பாசனத்திற்கு தமிழக முதல்வர் திறந்து வைத்தார் முன்கூட்டியே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால். வலங்கைமான் மற்றும் குடவாசல் வட்டார விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன் குறுவை சாகுபடி பணிகளை செய்து வருகின்றனர். இதை தொடர்ந்து, தமிழக அரசு விவசாயிகளை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.

வலங்கைமான் வட்டாரத்தில் இதுவரை குறுவை சாகுபடி 3 ஆயிரத்து 580 எக்டேர் நிலபரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குடவாசல் வட்டாரத்தில் 3 ஆயிரத்து 422 எக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் சாகுபடி பரப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறுவை விதைப்பு மேற்கொள்ள மொத்தத்தில் ஐந்தாயிரத்து 628 எக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறுவை சாகுபடிக்கு தேவையான விதைகள் மற்றும் உயிர் உரங்கள் ஆகியவை குடவாசல், கண்டிரமாணிக்கம், தென்கரை, அய்யம்பேட்டை, வலங்கைமான், ஆலங்குடி, ஆவூர்,மற்றும் அரித்துவாரமங்கலம் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.குறுவை சாகுபடி செய்ய விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு அரசு குறுவை தொகுப்புத் திட்டம் அறிவித்துள்ளது.

இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு 100 சதவீத மானிய விலையில் ஒரு மூட்டை யூரியா (45 கிலோ) ,ஒரு மூட்டை டிஏபி (50 கிலோ) , அரை மூட்டை பொட்டாஷ் (25 கிலோ) உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஒரு விவசாயிக்கு வழங்கப்படும் அதிகபட்ச நில வரம்பு ஒரு ஏக்கர் ஆகும். சிறு குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தமிழக அரசு இந்த ஆண்டு குறுவை பருவத்தில் மாற்று பயிர்களை ஊக்குவிக்கும் விதமாக மாற்று பயிர் சாகுபடிக்கு தேவையான இடு பொருட்களான விதைகள்,உயிர் உரங்கள், நுண்ணூட்டங்கள் ஆகியவை வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் பொது விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்திலும், பட்டியலின விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்திலும் வழங்கப்பட உள்ளது. இதனை பெற்று பயன்பெறலாம்.

குறுவை தொகுப்பு திட்டத்தில் பயன் பெற விவசாயிகள் ஆதார் எண், சிட்டா அடங்கல், புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை அணுகியோ அல்லது உழவன் செயலி மூலமாக நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம் என வலங்கைமான் மற்றும் குடவாசல் வட்டார விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் வலங்கைமான் வட்டரத்தில் நடவு செய்யப்பட்டுள்ள நெல் வயல்களை , வேளாண்மை துணை இயக்குனர் (மத்தியஅரசு திட்டம்) விஜயலட்சுமி, வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன், வலங்கைமான், உதவி வேளாண்மை அலுவலர்கள் ஏழுமலை மற்றும் சரவணன் ஆகியோர் பார்வையிட்டனர்.

The post வலங்கைமான், குடவாசல் பகுதி விவசாயிகள் அரசு குறுவை தொகுப்பில் சேர்ந்து பயனடையலாம் appeared first on Dinakaran.

Tags : Walangaiman ,Gudavasal ,Valangaiman ,Kudavasal ,Kurvai ,
× RELATED வலங்கைமான் அருகே மூங்கில்...