×

படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் ₹50 ஆயிரத்தில் இலவச சீர்வரிசை பொருட்களுடன் ஒரு ஜோடிக்கு திருமணம்

கண்ணமங்கலம் : படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் ஒரு ஜோடிக்கு ₹50 ஆயிரத்தில் இலவச சீர்வரிசை பொருட்களுடன் திருமணம் நடைபெற்றது.
கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் தமிழக அரசின் சார்பில் இலவச திருமண விழா நேற்று நடந்தது. விழாவிற்கு ஊராட்சி தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். கவுன்சிலர் தஞ்சியம்மாள்லோகநாதன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள் ஆர்.வி.சேகர், வேணுகோபால், மகளிர் ஒருங்கிணைப்பாளர் கஸ்தூரிமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் மகாதேவன் வரவேற்றார்.

திருவண்ணாமலை மாவட்ட இணை ஆணையர் சுதர்சன், உதவி ஆணையர் ஜோதிலட்சுமி வழிகாட்டுதல்படி செயல் அலுவலர் சிவஞானம் திருவண்ணாமலையை சேர்ந்த மணமகன் வி.சிவபிரகாஷ், மணமகள் பாரதி ஆகிய மணமக்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைகளை வழங்கி பேசியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு உத்திரவின்படி தமிழக அரசு சார்பில் ஏழை, எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில்களில் திருமணம் நடத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஜோடிகள் அந்தந்த பகுதியில் உள்ள கோயில்களில் விண்ணப்பங்கள் பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களோடு சமார்ப்பிக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ள ஜோடிகள் இந்து என்பதற்காக சான்று, வயது சான்று, திருமணப் பத்திரிகை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வழங்க வேண்டும்.

இதன்படி, மணமக்களுக்கு 4 கிராம் திருமாங்கல்யம், மணமகன் ஆடை, மணமகள் ஆடை, மணமகன், மணமகள் வீட்டார்களுக்கு 20 நபர்களுக்கு விருந்து, மாலைகள், பீரோ -1, கட்டில்-1, மெத்தை, கைக்கடிகாரம் -2, மிக்ஸி-1 உள்ளிட்ட சீர்வரிசை பாத்திரங்கள் உள்பட ஒவ்வொரு ஜோடிக்கும் தலா ₹50 ஆயிரம் வரை செலவு செய்யப்படும். ஒரு இணை ஆணையர் மண்டலத்திற்கு 20 திருமணங்கள் வீதம் வருடத்திற்கு 500 திருமணங்கள் நடத்தப்படும்.

இதன்படி நேற்று அரசு சார்பில் இலவச திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். இதில், கோயில் பணியாளர்கள் மோகன், சீனிவாசன், சிவக்குமார் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர் முடிவில், தமிழக அரசுக்கும், திருமணத்தில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மணமக்கள் நன்றி தெரிவித்தனர்.

The post படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் ₹50 ஆயிரத்தில் இலவச சீர்வரிசை பொருட்களுடன் ஒரு ஜோடிக்கு திருமணம் appeared first on Dinakaran.

Tags : Patavedu Renukampal temple ,Kannamangalam ,Kannamangalam… ,Padavedu Renukampal Temple ,
× RELATED ஆரணி அருகே அத்தியூர் மலையில் கள்ளச்சாராயம் விற்றவர் கைது..!!