×

முதுகுளத்தூரில் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் மின்கம்பங்கள், மின் கம்பிகள் மாற்றப்படுமா?

*எதிர்பார்ப்பில் பொதுமக்கள்

சாயல்குடி : முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதியில் பாதையில் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்வயர்களை விபத்து ஏற்படும் முன் மாற்றவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.முதுகுளத்தூர் பேரூராட்சியில் உள்ள செல்லியம்மன் கோயில் பிரசிதிப்பெற்றது. இங்கு நாள்தோறும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். வெள்ளி, செவ்வாய்கிழமை மற்றும் விஷேச காலங்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கோயிலை சுற்றி நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. முதுகுளத்தூர் தெருக்களின் முக்கிய வழித்தடமாகவும் உள்ளது. இந்த நிலையில் கோயில் அருகே செல்லும் குறுகிய சாலையோரங்களில் மின்கம்பங்கள் உள்ளது.

சுமார் 40 வருடங்களுக்கு முந்தைய கம்பங்கள் என்பதால் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதனை போன்று மின்கம்பிகளும் தாழ்வாக செல்கிறது. இதனால் கோயில் திருவிழாக்களின் போது சப்பரம், முளைப்பாரி, பால்குடம், பறவை காவடி போன்றவை எடுத்துச்செல்ல இடையூறாக உள்ளது.

மேலும் இத்தெருவின் இறப்பு நிகழ்ச்சிகளில் உடலை எடுத்துச்செல்லும் வாகனங்கள் செல்ல முடியவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து கோயில் நிர்வாகி மாடசாமி கூறுகையில், கோயில் அருகே மின்கம்பங்கள் சாய்வான நிலையிலும், மின் வயர்கள் தாழ்வாக தொங்கியும் உள்ளது. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. செல்லியம்மன் கோயிலில் வருகின்ற 23 ந்தேதி முதல் ஆகஸ்ட் 2 வரை பிரசிதிப்பெற்ற பூச்சொறிதல் மற்றும் பூக்குழி திருவிழா நடக்க உள்ளது.

பால்குடம், வேல் எடுத்தல், காவடி எடுத்தல். அன்னதானம் என தொடர் திருவிழா நடக்கிறது. இதனால் சுற்றுவட்டாரத்திலிருந்து ஆயிரக்கான பொது மக்கள் வருவார்கள். நூற்றுக்கணக்கான வாகனங்கள் வரும். எனவே இடையூறாக உள்ள மின்கம்பங்களை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும், தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என்றார்.

The post முதுகுளத்தூரில் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் மின்கம்பங்கள், மின் கம்பிகள் மாற்றப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Bapalathur Bapuradrashti ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...