×

நொய்யலில் வினாடிக்கு 60 கனஅடி தண்ணீர் வரத்து குளங்களுக்கு தண்ணீர் திறப்பு

 

கோவை, ஜூலை 8: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.  குறிப்பாக, சிறுவாணி அணை பகுதியில் 41 மிமீ மழை பதிவானது. சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. சிறுவாணியில் மழை பெய்து வருவதால் கோவை குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

எனவே, கோவை குற்றலாம் அருவிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது. மேலும், மழையின் காரணமாக நொய்யல் ஆற்றின் முதல் அணைக்கட்டான சித்திரைச்சாவடி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நொய்யலில் வினாடிக்கு 60 கன அடி தண்ணீர் வரத்துள்ளது. இதனால், ஆற்றில் இருந்து குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதன்படி, புதுகுளம், நரசாம்பதி, கொளராம்பதி ஆகிய 3 குளங்களுக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை தொடர்ந்தால், அடுத்த இரண்டு நாட்களில் நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post நொய்யலில் வினாடிக்கு 60 கனஅடி தண்ணீர் வரத்து குளங்களுக்கு தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Noyal ,Coimbatore ,South West ,Kerala ,Western Ghats ,Noyyal ,Dinakaran ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...