×

நீதிமன்ற வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி சரமாரி வெட்டப்பட்ட ரவுடி மருத்துவமனையில் உயிரிழப்பு: திண்டிவனம் கோர்ட்டில் 7 பேர் சரண்

சென்னை: செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி, சரமாரி வெட்டப்பட்ட ரவுடி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் (31). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் லோகேஷ், சீனிவாசன் ஆகிய இருவரும் செங்கல்பட்டு கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணைக்காக நேற்றுமுன்தினம் காலை ஆஜராகினர்.

அப்போது, அவர்களை பின் தொடர்ந்து வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல், லோகேஷை வெட்ட முயற்சி செய்தது. சுதாரித்துக்ெகாண்ட லோகேஷ், நீதிமன்றத்தின் வெளியே உள்ள ஜிஎஸ்டி சாலையில் ஓடினார். அவருடன் வந்த சீனிவாசன் மீண்டும் நீதிமன்றத்திற்கு உள்ளேயே ஓடி ஒளிந்து கொண்டார்.‌ எதிர் திசையில் வந்த மற்றொரு 3 பேர், லோகேஷ் மீது நாட்டு வெடிகுண்டு வீசினர். இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த லோகேஷை 6 பேர் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். உடனடியாக, லோகேஷை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காஞ்சிபுரம் சரக டிஐஜி பகலவன், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத், உள்ளிட்டோர் பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், லோகேஷை நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்ய முயன்றது இரும்புலியூர் பகுதியைச் சேர்ந்த விவேக் என்பது தெரியவந்தது. கடந்த 2015ம் ஆண்டு கிரிக்கெட் விளையாடும் போது ஏற்பட்ட தகராறில் பாலாஜி மற்றும் பாஸ்கர் ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் பாலாஜி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் பாலாஜியின் ஆதரவாளர்களால் 2017ம் ஆண்டு பாஸ்கர் கொலை செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக பழிக்குப் பழி சம்பவமாக பாலாஜியின் ஆதரவாளர்கள், லோகேஷ் மற்றும் சீனிவாசனை கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.

இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி லோகேஷ் நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து செங்கல்பட்டு நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, செங்கல்பட்டு மாவட்ட துணை கண்காணிப்பாளர் பாரத் தலைமையில், 24 பேர் கொண்ட தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரத்தை சேர்ந்த ராகுல் (27), தனசேகரன் (25), பிரவீன்குமார் (23), லோகேஷ் (27), அரவிந்த்குமார் (25), ரூபேஷ் (22), சாம்சன் மோசஸ் (26) ஆகிய 7 பேர், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

The post நீதிமன்ற வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி சரமாரி வெட்டப்பட்ட ரவுடி மருத்துவமனையில் உயிரிழப்பு: திண்டிவனம் கோர்ட்டில் 7 பேர் சரண் appeared first on Dinakaran.

Tags : Rowdy ,Dindivanam ,CHENNAI ,Chengalpattu court ,Tindivanam Court ,Dinakaran ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்