×

ஊராட்சி தலைவர்களின் கோரிக்கைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்: கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம்

வாலாஜாபாத்: பூசிவாக்கம் ஊராட்சியில் நடந்த ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு கூட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவர்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வாலாஜாபாத் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் கூட்டம் பூசிவாக்கம் ஊராட்சியில் நேற்று நடைபெற்றது. இதில், ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பின் தலைவர் அஜய்குமார் தலைமை தாங்கினார். பொருளாளர் லெனின்குமார் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் ஊராட்சியின் செயல்பாடுகள், அரசின் திட்டங்களை மக்களிடம் எவ்வாறு கொண்டு செல்வது, ஊராட்சி பிரச்னைகளை அதிகாரிகளிடம் எவ்வாறு அணுகுவது உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன. இதனைதொடர்ந்து மின்சார வாரியத்தில் புதிய மின் இணைப்பு கோருபவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவரின் தடையில்லா சான்று இல்லாமல் புதிய மின் இணைப்பு வழங்க பரிசீலிக்க கூடாது. ஊராட்சியில் உள்ள பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்படும் சூழலில், ஊராட்சி மன்ற தலைவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தால், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு ஊராட்சித் தலைவரால் கோரப்படும் கோரிக்கைகளை உடனடியாக காலம் தாழ்த்தாமல் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஊராட்சியில் பணியாற்றும் ஊராட்சி செயலர், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர், மக்கள் நலப் பணியாளர், தூய்மை காவலர் மற்றும் துப்புரவு பணியாளர் உள்ளிட்ட அனைவரின் பணிப்பதிவேடுகளும் ஊராட்சியிலேயே பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணி ஆணையில் ஊராட்சி தலைவர் ஒப்புதல் இல்லாமல் பண பட்டுவாடா செய்ய அனுமதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post ஊராட்சி தலைவர்களின் கோரிக்கைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்: கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Walajabad ,Padhavakkam ,Padhavakam Municipal Leaders Confederation ,
× RELATED வாலாஜாபாத் பேரூராட்சியில் மினி...