×

அதிகரிக்கும் குழந்தைகளின் உடல்பருமன்: 25 வயதிலேயே பல நோய்களை எதிர்கொள்ளும் அபாயம்

பெரம்பூர்: தற்போது நாட்டில் எந்த அளவிற்கு நாகரிக வளர்ச்சி, தொழில்நுட்பம், பொருளாதாரம் உள்ளிட்டவை வளர்ந்துள்ளதோ அந்த அளவிற்கு நோய்களும் அதிகரித்து வருகின்றன. மருத்துவ துறை பல்வேறு வளர்ச்சி அடைந்த போதிலும் நம் முன்னோர்கள் வாழ்ந்த நூறு வயது அல்லது 90 வயது என்பதை நம்மால் தற்போது வரை எட்ட முடியவில்லை. சராசரி மனிதனின் ஆயுட்காலம் குறைந்து வருகிறது. இதற்கு அவர்கள் பார்க்கும் வேலை, மன அழுத்தம், உணவு பழக்க வழக்கம், காற்று மாசு உள்ளிட்ட பல காரணங்களை மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஒரு காலக்கட்டத்தில் உயர் ரத்த அழுத்தம் என்பது 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரும். அதேபோன்று சர்க்கரை நோய் என்பது ஒரு காலத்தில் பணக்காரர்களுக்கு மட்டுமே வரும் நோய் என பலரும் அதனை நகைச்சுவையாக கூறி வந்தனர். இன்று ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பதை காணலாம். அந்த அளவிற்கு நோய்களின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இந்த உயர் ரத்த அழுத்த சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்கள் ஒரே நாளில் மனிதனை வந்து தாக்குகின்றனவா என்று பார்த்தால் கண்டிப்பாக கிடையாது.

நமக்கு நோய் வராது என்ற கனவில் மனிதன் ஓடிக்கொண்டே இருப்பான். அவனது 10 அல்லது 15 ஆண்டு பழக்க வழக்கங்கள் மொத்தமாக சேர்த்து ஒருநாள் ஒரு நோயை கொண்டு வந்து அவனது உடலில் திணிக்கும். அதன் பிறகு குறிப்பிட்ட அந்த நபர் உணவு பழக்க வழக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவார். கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் என்பதைப் போல நோய்கள் வருவதற்கு முன் தன்னை காத்துக் கொள்ளக்கூடிய அறிவை தற்போது படித்தவர்களும் பின்பற்றுவது கிடையாது. அந்த வகையில், குழந்தை பருவத்தில் இருந்தே பல்வேறு பழக்க வழக்கத்தின் மூலம் நோய்கள் நம்மை வந்தடைகின்றன. இதனை அறியாமல் நாமும் பல்வேறு உணவு பழக்க வழக்கங்களை தொடர்ந்து வருகிறோம்.

குறிப்பாக, தற்போது இளைய தலைமுறையினருக்கு பெரிய சவாலாக உள்ள விஷயம் உடல் பருமன். ஓடி ஆடி விளையாட வேண்டிய வயதில் தொப்பையுடன் குழந்தைகள் என்னால் இதற்கு மேல் நடக்க முடியவில்லை எனக் கூறும் பேச்சை கேட்டு பெற்றோர் கலங்கி போகின்றனர். அந்த கலக்கத்துடன் குழந்தைகளை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து செல்லும்போது பேக்கரியில் நின்று பொரித்த உணவுகளை அவர்கள் குழந்தைகளுக்கு வாங்கித் தரவும் மறுப்பதில்லை. இவ்வாறு உணவில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் குழந்தைகளுக்கு தொடர்ந்து அதிக கலோரி உள்ள உணவுகளை கொடுத்து அவர்களை மந்த நிலைக்கு உட்படுத்துகின்றனர்.

எனது குழந்தை உடல் மிகவும் மெலிவூற்று உடல் சோர்வாக உள்ளான் என மருத்துவர்களை நாடும் பெற்றோர்கள், எனது மகன் அல்லது மகள் குண்டாக உள்ளார் என மருத்துவர்களை நாடுவது கிடையாது. எனது குழந்தையை நாங்கள் நன்றாக பார்த்துக் கொள்கிறோம். அவன் ஆசைப்பட்டதை நாங்கள் வாங்கி தருகிறோம் என பெருமை பேசிக்கொள்ளும் பெற்றோர்கள் வருங்காலத்தில் தங்களது குழந்தைகளை நோயாளியாக வளர்க்கின்றனர் என்பதை மறந்து விடுகின்றனர்.

குழந்தைகளின் தற்போதைய உடல்நிலை குறித்து ஒரு கருத்தரங்கில் ஒரு சமூக ஆர்வலர் பேசும்போது, 2000 ஆண்டுகளில் திருமணம் செய்தவர்கள் மிகவும் துரதிர்ஷ்டவாசிகள். ஏனென்றால், அவர்களது பிள்ளைகளின் மரணத்தை அவர்கள் வருங்காலங்களில் பார்க்கக்கூடிய சூழ்நிலையும் கூட வரலாம் என அதிர்ச்சி தரக்கூடிய ஒரு புள்ளி விவரத்தை மேடையில் பேசினார். இதைக்கேட்ட பல பெற்றோர்கள் அதிர்ந்து போனார்கள். அதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். தற்போது குழந்தைகளின் சந்தோஷம் ஒன்றை மட்டுமே கருத்தில் கொள்ளும் பெற்றோர்கள் அவர்களை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துவது இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. தற்போது குழந்தைகளின் உடல் பருமன் ஒரு சவாலாக மருத்துவ உலகை ஆட்டி படைத்துக் கொண்டிருக்கிறது. இவர்கள் வருங்காலத்தில் வளர்ந்து எதிர்கொள்ளக்கூடிய பிரச்னைகள் குறித்து மருத்துவ கருத்தரங்கில் விவாதிக்கப்படுகிறது. இதனால் குழந்தைகளின் உடல் பருமனை ஒரு வளர்ச்சியாக கருதாமல் அதனை ஒரு நோயாக பார்க்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

அந்த வகையில் அரசு கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையின் குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு மருத்துவரும் மருத்துவ பேராசிரியருமான டாக்டர் கி.இளங்கோ கூறியதாவது: வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றான இந்தியாவில் குழந்தைகளின் அதிக உடல் பருமன் என்பது தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளது. இதுகுறித்து சிறப்பு மருத்துவர்கள் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகளின் எடை குறைப்பு பற்றி கவலைப்படும் பெற்றோர்கள் குழந்தைகளின் எடை அதிகரிப்பு குறித்து கவலைப்படுவது இல்லை. இதை ஒரு வியாதியாக நாம் பார்க்க வேண்டும். தற்போது உள்ள காலகட்டத்தில் குழந்தைகளின் எடை அதிகரிக்க காரணமாக இருப்பது குழந்தைகள் பிறந்தவுடன் ஆறு மாதம் கழித்து கடைகளில் விற்கப்படும் சத்து உணவுகளை வாங்கி தருகின்றோம். அதில் சர்க்கரையின் அளவு எவ்வளவு உள்ளது என்பதை பார்ப்பது கிடையாது.

வீட்டிலேயே தயார் செய்யப்படும் சத்து மாவுகளை குழந்தைகளுக்கு தரலாம். ஆறு மாதம் முதல் ஒரு வயது வரை இணை உணவாக கடைகளில் கொடுக்கப்படும் பல்வேறு உணவுகளை தவிர்த்து வீட்டில் தயாரிக்கப்படும் சத்து உணவுகளை தர வேண்டும். பள்ளிகளில் பெரிய விளையாட்டு மைதானங்கள் இல்லாவிட்டாலும் தினமும் குழந்தைகளுக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கி வீட்டின் அருகாமையில் உள்ள விளையாட்டு திடலுக்கு அழைத்துச் சென்று பெற்றோர்கள் அவர்களை விளையாட அனுமதிக்க வேண்டும். பெற்றோர்களும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும். குழந்தைகளை வீட்டில் சிறுசிறு வேலைகளை செய்ய பயிற்றுவிக்க வேண்டும். எனது குழந்தையை நான் செல்லமாக வளர்த்து விட்டேன் என பெற்றோர்கள் கூறும் நிலையை மாற்ற வேண்டும். பல பெற்றோர்கள் பெண் குழந்தைகளை வேலை செய்ய அனுமதிக்காமல் மிகவும் செல்லமாக வளர்கின்றனர். எந்த உணவு வகைகளை கேட்டாலும் வாங்கித் தருகின்றனர். இதனால் பெண் பிள்ளைகள் பருவம் அடையும் போது அவர்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். நாளடைவில் அவர்களுக்கு பிசிஒடி எனப்படும் கருமுட்டை பிரச்னை மற்றும் நீர்க்கட்டி பிரச்னை போன்ற பல பிரச்னைகள் ஏற்படுகிறது. குழந்தையின்மையும் ஏற்படுகிறது.

இப்போது, 25 முதல் 30 வயதுடைய ஆண்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் போன்ற பல பிரச்னைகள் வருவதை கண்கூடாக பார்க்கின்றோம். இது ஒரே நாளில் ஏற்பட்ட பாதிப்பு கிடையாது. குழந்தைகளிலிருந்து இவர்கள் எடுத்துக் கொண்ட உணவு வகைகள் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி இதுபோன்ற நோய்கள் வருகிறது. இதற்கு முழு காரணம் அவர்களது பெற்றோர்கள்தான். எனவே குழந்தைகளுக்கு எந்த விஷயத்தில் சுதந்திரம் தர வேண்டும், எந்த விஷயத்தில் கண்டிக்க வேண்டும், எந்த விஷயத்தில் தண்டிக்க வேண்டும் என்பதை தற்போது உள்ள பெற்றோர் நன்கு உணர்ந்து குழந்தைகளின் உணவு பழக்க வழக்கத்தை மாற்றினால் வருங்காலங்களில் அவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதை பெற்றோர்கள் பார்த்து மகிழ்ச்சி அடையலாம். இல்லையென்றால் குழந்தைளை பருவ வயதில் மருத்துவமனை மருத்துவமனையாக கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே தற்போது உள்ள குழந்தைகளின் உடல் பருமன் விஷயத்தில் பெற்றோர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு மருத்துவர் இளங்கோ தெரிவித்தார்.

* பீட்சா, பர்கர் கூடாது

குழந்தை பிறந்ததும் நிறைய பெண்கள் பவுடர் பால் தருகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும். குழந்தைகளின் ஒன்றரை வயது வரை கண்டிப்பாக தாய்ப்பால் தர வேண்டும். பள்ளிப் பருவத்தில் அதிக கலோரி உடைய குளிர்பானங்கள், பீட்சா, பர்கர், பேக்கரி உணவுப் பொருட்கள், சிப்ஸ் போன்றவற்றை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அதிக உப்பு, அதிக சர்க்கரை, எண்ணெய் மற்றும் அசைவ உணவு வகைகளை குழந்தை பருவத்தில் அதிகம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

* விளையாட்டை மறக்க செய்த செல்போன், டி.வி.

தற்பொழுதுள்ள குழந்தைகள் பள்ளிகளிலும் சரி வீடுகளிலும் சரி ஓடி ஆடி விளையாடுவது கிடையாது. செல்போன் மற்றும் டிவி உள்ளிட்டவற்றை பார்த்துக் கொண்டே உணவுகளை எடுத்துக் கொள்கின்றனர். இதனால் எவ்வளவு உணவு உண்கின்றனர் என்பது அவர்களுக்கே தெரியாமல் செல்போன் மற்றும் டிவியில் மூழ்கி விடுகின்றனர். இதனால் குழந்தைகள் சாப்பிட்டவுடன் அவர்களுக்கு ஜீரணம் ஆவதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. பள்ளிகளிலும் பெரிய விளையாட்டு மைதானங்கள் இல்லாமல் மிகவும் சிறிய அளவில் உள்ளது. எனவே குழந்தைகள் விளையாட பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும்.

* சிரமம் பார்க்க கூடாது

தற்போது பள்ளி செல்லும் குழந்தைகளின் மதிய உணவுக் கூடையை பார்த்தால் அதில் கண்டிப்பாக பிஸ்கட், சிப்ஸ், போன்ற பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு வகைகள் இருக்கும். 100 குழந்தைகளின் சாப்பாட்டு பைகளை ஆராய்ந்தால் அதில் ஒரு குழந்தையின் பையிலாவது வேர்க்கடலை, கொண்டைக்கடலை, சுண்டல், பயிறு வகைகள், சிறு தானிய உணவுகள் போன்றவற்றை காண முடிகிறதா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். இவற்றை குழந்தைகள் சாப்பிடுகிறார்களோ இல்லையோ, ஆனால் இவற்றை குழந்தைகளுக்கு கொடுத்து அனுப்புவதில் பெற்றோர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள் என்பதை உண்மை. எனவே பாரம்பரிய உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்து பழக வேண்டும்.

* ஒரே குழந்தை ஓவர் செல்லம்

ஒரு காலகட்டத்தில் வீட்டிற்கு 5 குழந்தைகள், 3 குழந்தைகள் இருந்த காலம் மாறி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வீட்டிற்கு 2 குழந்தைகள் என இருந்தது. தற்போது, பெரும்பாலும் பலர் ஒரே ஒரு குழந்தையை மட்டுமே பெற்றுக் கொள்கின்றனர். இதனால் அதிகம் செல்லம் கொடுத்து வளர்க்கின்றனர். இதுவும் ஒரு வகையில் அந்த குழந்தைகளுக்கு எதிராக போய் முடியும் என்பதை பெற்றோர்கள் அறிவது கிடையாது. குழந்தைகள் வளரும் பருவத்தில் எந்த தின்பண்டம் கேட்டாலும் வாங்கித் தருகிறார்கள். மேலும் நொறுக்கு தீனி என்ற பெயரில் ஏராளமான தின்பண்டங்களை வாங்கி தருகிறார்கள். இது குழந்தைகளின் உடலுக்கு தீங்கை விளைவிக்கும் என்பதை அவர்கள் மிகவும் தாமதமாக அறிந்து கொள்கிறார்கள். இதுவும் ஒரு வகையில் தற்போது உள்ள குழந்தைகளின் உடல் பருமனுக்கு காரணமாக அமைந்து விடுகிறது.

The post அதிகரிக்கும் குழந்தைகளின் உடல்பருமன்: 25 வயதிலேயே பல நோய்களை எதிர்கொள்ளும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Perambur ,
× RELATED வெடித்து சிதறிய மின்பெட்டி