×

அனகாபுத்தூர் பேருந்து நிலையம் அருகே அடையாறு ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்: பெண்கள் ஒப்பாரி வைத்து எதிர்ப்பு

பல்லாவரம்: அனகாபுத்தூர் பேருந்து நிலையம் அருகே அடையாறு ஆற்றின் கரையோர ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண்கள் ஒப்பாரி வைத்ததால் பரபரப்பு நிலவியது.
அனகாபுத்தூர் பேருந்து நிலையம் அருகே அடையாறு ஆற்றின் கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் மற்றும் கடைகளை வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று அகற்ற வந்தனர். தகவலறிந்த டோபிகானா தெருவில் வசிக்கும் ஆண்கள், பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் திரண்டு, வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் உறுதியாக இருந்ததால், பெண்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து, திடீரென சாலையில் அமர்ந்து ஒப்பாரி வைத்து அழ தொடங்கினர். சிலர், தங்களது கடைகள் மற்றும் வீடுகளில் உள்ள பொருட்களை எடுத்துச்செல்ல சற்று கால அவகாசம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டனர். அதன்பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள், உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சற்று அமைதி காத்து, பின்னர் ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணிகளை தொடங்கினர்.

இதே பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, அடையாறு ஆற்றின் கரையோர ஆக்கிரமிப்புகளை, வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினர். பின்னர் தமிழ்நாடு அரசு சார்பில், பல கோடி மதிப்பீட்டில் அடையாறு ஆற்றின் கரை பலப்படுத்தப்பட்டது. இதன் பலனாக, கடந்த ஆண்டு சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தபோதும் கூட, ஊரின் உள்ளே தண்ணீர் வராமல், அடையாறு ஆற்றின் வழியாக மழைநீர் தங்கு தடையின்றி கடலில் கலந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இருக்க, மீண்டும் ஆக்கிரமிப்பாளர்கள் தங்களது கைவசம் இருந்த இடங்களை ஆக்கிரமித்து, வீடுகள் மற்றும் கடைகளை கட்டி குடியேறி வருகின்றனர். இதே நிலை நீடித்தால், மீண்டும் அடையாறு ஆற்றின் கரை ஆக்கிரமிக்கப்படுவதுடன், அரசு பல கோடி ரூபாய் செலவு செய்த மக்களின் வரிப்பணமும் வீணாகும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் உயர்நீதிமன்றமும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை எவ்வித சமரசமுமின்றி உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது.

அதன்பேரில், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். முன்னதாக ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முன், சம்பந்தப்பட்ட பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. அசம்பாவிதங்களை தவிர்க்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

The post அனகாபுத்தூர் பேருந்து நிலையம் அருகே அடையாறு ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்: பெண்கள் ஒப்பாரி வைத்து எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Adyar ,Anagaputhur ,Pallavaram ,Adyar river ,Dinakaran ,
× RELATED அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர்...