×

நானெல்லாம் முற்றும் துறக்கல தெரியுமா…. நகைக்கடையை அலறவிட்ட நிர்வாண சாமியார்: ஆசிர்வதிப்பதாக கூறி பணம், நகையுடன் எஸ்கேப்

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் ஆசீர்வாதம் செய்ய வந்ததாக கூறி நகைக்கடை உரிமையாளரிடம் நிர்வாண சாமியார் பணம், நகையை பெற்றுச் சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ராஜபாளையம் மெயின் சாலையில் தனியார் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் ஆசிரமம் நடத்தி வரும் நிர்வாண சாமியார் ஒருவர் 30 நாள் புனித யாத்திரையாக ராமேஸ்வரம், கன்னியாகுமரி செல்லும் வழியில் சங்கரன்கோவில் வந்தார்.

அப்போது ராஜபாளையம் சாலையில் உள்ள தனியார் நகைக்கடைக்கு உள்ளே சென்ற நிர்வாண சாமியார், தான் ஹரித்துவாரில் இருந்து வருவதாகவும், இந்த பகுதியை கடக்க முயன்ற போது திடீரென எனக்கு கடவுள் அருள்வாக்கு கேட்டதாகவும், அதில் உங்கள் நகைக்கடைக்குச் சென்று உங்களை ஆசிர்வாதம் செய்துவிட்டு போ என கூறியதாகவும், அதனாலேயே தங்களது கடைக்கு தங்களை ஆசீர்வாதம் செய்வதற்காக வந்ததாகவும் கூறியுள்ளார். இதனால் உரிமையாளரும், கடை ஊழியர்களும் செய்வது அறியாமல் திகைத்துப் போய் நின்றனர். தொடர்ந்து கடை உரிமையாளர் நிர்வாண சுவாமியை கும்பிட்டு வரவேற்று அமர செய்தார்.

அப்போது கடைக்குள் வந்த ஒரு சிலர் நிர்வாண சாமியாரின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். தொடர்ந்து கடையின் உரிமையாளர் நிர்வாண சாமியாரின் வழி செலவுக்காக சிறிய ஒரு தொகையை கவருக்குள் வைத்து அவருக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளார். இதனைப் பெற்றுக் கொண்ட நிர்வாண சாமி, இது தனக்கு பூஜைக்கு உண்டான செலவு என்றும் என்னுடைய ஆசீர்வாதம் கிடைத்தால் நீ இந்த ஊரிலேயே மிகப்பெரிய ஆளாய் வருவாய் என்றும் கூறியுள்ளார். பின்னர் நான் உனக்கு ஆசிர்வாதம் செய்கிறேன் என்று கூறிக்கொண்டே கடையின் உள்ளே நகைகள் இருக்கும் பகுதிக்கு உரிமையாளரை செல்லுமாறு கூறியுள்ளார்.

அப்போது நிர்வாண சாமியார் இருக்கையில் இருந்து எழுந்து வந்து உரிமையாளரின் தலையில் கை வைத்து மீண்டும் ஒரு முறை ஆசிர்வாதம் செய்தார். பின்னர் நிர்வாண சாமியார் கழுத்தில் அணிய ஒரு தங்க செயின் வேண்டும் என்று கடை ஊழியரிடம் கூறி உரிமையாளரிடம் கேட்க சொன்னார். இதைக் கேட்ட உரிமையாளர் சில நொடிகள் அதிர்ச்சியடைந்தாலும் சுதாரித்துக் கொண்டு உரிமையாளர் ஒரு பவுன் மதிப்பிலான தங்க செயினை நிர்வாண சாமியாரிடம் கொடுப்பதற்காக எடுத்துள்ளார். அந்த செயின் வேண்டாம், பெரிய செயின் எடுங்கள் என்று நிர்வாண சாமியார் கூறியுள்ளார்.

ஆனால் கடையின் உரிமையாளர், அது வாடிக்கையாளர் ஒருவரின் ஆர்டரின் பெயரில் செய்யப்பட்டுள்ளது. எனவே இதையே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி ஒரு பவுன் மதிப்பிலான தங்க செயினை மட்டும் நிர்வாண சாமியாரின் கழுத்தில் அணிவித்தார். இதனை பெற்று கொண்ட நிர்வாண சாமியார் தங்க செயின் மற்றும் பணத்தோடு கடையில் இருந்து வெளியே சென்றார். முற்றும் துறந்த சாமியார் நகை, பணத்துக்கு ஆசைப்பட மாட்டார்கள். அப்படியிருக்கையில் நகைக்கடை உரிமையாளரிடம் பணம் மற்றும் நகையை அவர் லாவகமாக வாங்கிக்கொண்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post நானெல்லாம் முற்றும் துறக்கல தெரியுமா…. நகைக்கடையை அலறவிட்ட நிர்வாண சாமியார்: ஆசிர்வதிப்பதாக கூறி பணம், நகையுடன் எஸ்கேப் appeared first on Dinakaran.

Tags : Nirvana ,Sankarankoil ,Dinakaran ,
× RELATED இன்ஸ்பெக்டருடன் உல்லாசம் பெண் எஸ்ஐ அதிரடி டிரான்ஸ்பர்