×

கோயில்கள் தொடர்பாக 7 பொதுநல வழக்குகள் ரூ.3.5 லட்சம் டெபாசிட் செய்தால் விசாரணை: மனுதாக்கல் செய்தவருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோயில்கள் தொடர்பான பொதுநல வழக்கு தொடர்ந்த ரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மனின் நேர்மை தன்மையை நிரூபிக்கும் வகையில், 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை டெபாசிட் செய்யும்படி அவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கோயில் தொடர்பாக பொதுநல வழக்குகள் தொடர்ந்து வரும் ரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் 7 பொதுநல மனுக்களை தாக்கல் செய்துள்ளார். அதில், தக்கார் நியமனம், தக்கார்களின் முன்னிலையில் உண்டியல் திறக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்திருந்தார். இந்த 7 வழக்குகளும் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரர் எந்த கோயிலின் பக்தர் என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், நான் எல்லா கோயில்களிலும் பக்தர்தான் என்று பதில் அளித்தார். அப்போது நீதிபதிகள், மனுதாரர் தனது நேர்மை தன்மையை நிரூபிக்கும் வகையில் வழக்கு ஒன்றுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் என 7 வழக்குகளுக்கும் சேர்த்து மொத்தம் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும். ஒருவேளை இந்த வழக்குகளில் வழக்கு செலவு தொகையை செலுத்த நேரிட்டால் அதற்காக இந்த தொகையை பயன்படுத்த முடியும்.
வழக்குகள் நியாயமானதுதான் என்று நிரூபணமானால் மட்டுமே அந்த தொகை திரும்ப அளிக்கப்படும். இல்லை என்றால் அந்த தொகை அபராதமாக எடுத்துக்கொள்ளப்படும். ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் தொகையை செலுத்திய பிறகுதான் வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.

The post கோயில்கள் தொடர்பாக 7 பொதுநல வழக்குகள் ரூ.3.5 லட்சம் டெபாசிட் செய்தால் விசாரணை: மனுதாக்கல் செய்தவருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Rangarajan Narasimhan ,Ranga ,
× RELATED பொதுநல வழக்கு: ரங்கராஜன் நரசிம்மன்...