×

தென்மாவட்டங்களில் குற்றங்களைத் தடுக்க 24 மணிநேரமும் ரோந்துப்பணி: ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவு

மதுரை: தென் மாவட்டங்களில் குற்றங்களை தடுக்க போலீசார் 24 மணிநேரமும் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தின் புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள சங்கர் ஜிவால், மாநிலம் முழுவதும் உள்ள ஐஜிக்கள், கமிஷனர்கள் மற்றும் எஸ்பிக்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவது, குற்றங்களை குறைப்பது தொடர்பாக போலீசாருக்கு பத்து கட்டளை பிறப்பித்துள்ளார். இந்தக் கட்டளைகளை, தென் மண்டலம் முழுவதும் போலீசார் கடைபிடிக்க தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவிட்டு, அதனை கண்காணித்து வருகிறார்.

இதுகுறித்து அஸ்ரா கார்க் கூறியதாவது: பகல் மற்றும் இரவு நேரங்களில் கண்டிப்பாக வாகனச் சோதனை நடத்த வேண்டும். அப்போது குற்றப் பட்டியலில் உள்ளவர்கள் கண்டறியப்பட்டால், அவர்களை கைது செய்ய வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்டுகிறவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். விதிமீறிய மது விற்பனையை கண்டறிந்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். லாட்ஜ்கள், ஓட்டல்களில் சோதனை நடத்தி சரியான முகவரியை கொடுத்து தங்கியுள்ளார்களா என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றி லாட்ஜ் உரிமையாளர்கள் அல்லது நிர்வாகிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணிக்கு பின் திறக்க வேண்டும். அதனை இரவு 10 மணிக்கு மூட வேண்டும். சில்லரை விற்பனை செய்யக்கூடாது. உரிமம் இல்லாமல் பார் நடத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பாருக்கு சீல் வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கட்டளைகளை டிஜிபி பிறப்பித்துள்ளார். கடந்த ஒரு வாரமாக தென்மாவட்டங்களில் போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குற்றச்செயல்களை தடுக்க, 24 மணிநேரமும் ரோந்துப்பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. பழைய குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கைகளால் குற்றங்கள் குறைந்துள்ளது.இவ்வாறு தெரிவித்தார்.

The post தென்மாவட்டங்களில் குற்றங்களைத் தடுக்க 24 மணிநேரமும் ரோந்துப்பணி: ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : southern ,IG Azra Garg ,Madurai ,South Zone ,IG ,Dinakaran ,
× RELATED ரயிலில் இருந்து கர்ப்பிணி...