×

பாஜ நடத்திய கல்யாண கலாட்டா திருமணமான 3 ஜோடிகளுக்கு மீண்டும் திருமணம் செய்து வைத்த அண்ணாமலை: மறுநாளே குழந்தைக்கு முதல் பிறந்தநாள் கொண்டாடிய விநோதம்

திண்டிவனம்: திண்டிவனத்தில் பாஜ தலைவர் அண்ணாமலை நடத்தி வைத்த திருமண ஜோடி, திருமணமான மறுநாளே குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் 39 ஜோடிகளுக்கு தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தலைமையில் கடந்த 2 நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது. அந்த அறக்கட்டளையின் நிறுவனர், பாஜ மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் ஹரிகிருஷ்ணன் ஆவார். இவரது தந்தை முன்னாள் அமைச்சரும், தற்போதைய அதிமுக எம்பியுமான சி.வி.சண்முகத்துடன் நெருக்கமாக உள்ள முரளி (எ) ரகுராமன். இவர் அதிமுகவின் விழுப்புரம் மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். மேலும், விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவராகவும் இருந்தார்.

தந்தையும், மகனும் வெவ்வேறு கட்சியில் இருந்தாலும், திருமண நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும், ஹரிகிருஷ்ணனின் தந்தை முரளி கவனித்து வந்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை கவனித்து வந்த முரளி, பாஜ தலைவர் அண்ணாமலையுடன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார். அண்ணாமலை காலில் விழுந்து ஆசி பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது. மேலும், விழா மேடையில் அண்ணாமலையை புகழ்ந்து பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனால், விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

அண்ணாமலையுடன் சி.வி.சண்முகம், எடப்பாடி ஆகியோர் நேரடியாக மோதி வரும் நிலையில், அண்ணாமலையை புகழ்ந்த நிர்வாகி அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் அதிமுக-பாஜ மோதல் மேலும் தீவிரமடைந்து உள்ளது. இந்நிலையில், திருமணம் செய்து வைக்கப்பட்ட 39 ஜோடிகள் 3 ஜோடிகளுக்கு ஏற்கனவே திருமணமானவர்கள் என்றும், சிலருக்கு குழந்தைகள் இருப்பதும் தெரியவந்து உள்ளது. இதில் அண்ணாமலை திருமணம் செய்து வைத்த ஒரு தம்பதியின் குழந்தைக்கு நேற்று முன்தினம் முதல் பிறந்தநாள் கொண்டாடியது தெரியவந்து உள்ளது.

திண்டிவனம் கிடங்கல் 2 பகுதியை சேர்ந்தவர்கள் ராஜா(எ) கிறிஸ்டோபர் மற்றும் எபினேசர். சகோதரர்களான இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. தம்பி எபினேசருக்கு இரண்டு குழந்தைகளும், அண்ணன் கிறிஸ்டோபருக்கு ஒரு குழந்தையும் உள்ளதாம். இதேபோல், அதே பகுதியை சேர்ந்த திவாகர் என்ற இளைஞருக்கும் ஏற்கனவே மயிலம் கோயிலில் திருமணம் ஆகிவிட்டதாம். இந்த 3 ஜோடிகளுக்கும் அண்ணாமலை மீண்டும் திருமணம் செய்து வைத்து உள்ளார். இதில் கிறிஸ்டோபர் தம்பதியின் குழந்தைக்கு நேற்று முன்தினம், திண்டிவனத்தில் உள்ள தனியார் மகாலில் முதல் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு உள்ளது.

இந்த காமெடி கல்யாண விநோதம் இன்னும் சில ஜோடிகள் இருக்கலாம் என கூறப்படுகிறது. அண்ணாமலை நடத்தி வைத்த திருமணத்துக்கு செல்ல பெரிதாக யாரும் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. இதனால், பலரிடம் நாங்கள் பணம் மற்றும் நகை தருகிறோம் என ஆசை வார்த்தை கூறி வலுக்கட்டாயமாக அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த லிஸ்ட்டில்தான் திருமணமான 3 ஜோடிகளையும் அழைத்து வந்துள்ளனர். இந்த திருமணம் பணம் மற்றும் நகைக்காக நிகழ்ந்ததா? அல்லது திருமண ஜோடிகள் கிடைக்காமல் அவசர கதியில் ஏற்பாடு செய்யப்பட்டதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

* அண்ணாமலை யாரு – சுப்ரமணிய சுவாமி
சுப்ரமணிய சுவாமி ஓல்டு இந்தியா-அண்ணாமலை
பாஜ மூத்த தலைவரான சுப்ரமணிய சுவாமி, சில காலமாகவே தமிழக பாஜவையும், அதன் தலைவர் அண்ணாமலையையும் விமர்சித்து பேசி வருகிறார். அவர் சமீபத்தில் நிருபர்களிடம் ‘அண்ணாமலை யார்’ எனவும், ‘தமிழகத்தில் பாஜ இருக்கிறதா? நான் எங்கேயும் பாஜவை பார்க்கவில்லை. தமிழகத்தில் பாஜவையே பார்க்காதபோது, அவரை எப்படி பார்க்க முடியும்?’ என்றார். இதற்கு பதிலளிக்கும் வகையில், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது: பெரியவர்களை தரக்குறைவாக பேசுவது எனக்கு பிடிக்காது. சுப்ரமணிய சுவாமி எல்லாம் ‘ஓல்டு இந்தியா’. அவரை நான் இதுவரை பார்த்ததே இல்லை. என் வாழ்க்கையில் இனி பார்க்க போவதும் இல்லை. எனக்கு எந்த ‘காட் பாதர்’ உடைய ஆசீர்வாதமும் தேவையில்லை. ஒருவரை பார்த்து அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினால்தான் ஏற்றுக்கொள்வார்கள் என்றால், அது எனக்கு தேவையே கிடையாது. எங்களுக்கு வெளியில் இருந்து எந்தவிதமான சர்டிபிகேட்டும் வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

The post பாஜ நடத்திய கல்யாண கலாட்டா திருமணமான 3 ஜோடிகளுக்கு மீண்டும் திருமணம் செய்து வைத்த அண்ணாமலை: மறுநாளே குழந்தைக்கு முதல் பிறந்தநாள் கொண்டாடிய விநோதம் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Baja ,Dindivanam ,BJP ,Kalyana gala ,Vinotham ,
× RELATED ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவராக...