×

இந்தாண்டு கும்பாபிஷேகம் நடத்துவதில் சிக்கல் ஆமை வேகத்தில் தலசயன பெருமாள் கோயில் திருப்பணி: விரைந்து முடிக்க பக்தர்கள் கோரிக்கை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் திருப்பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் இந்தாண்டு கும்பாபிஷேகம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாமல்லபுரத்தில் கடந்த 7ம் நூற்றாண்டு முதல் 9ம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்த பல்லவ நரசிம்மன், மகேந்திரவர்மன், ஹரிசேகர மகாராஜா, சிம்ம விஷ்ணு போன்ற பல்லவ மன்னர்களால் கடற்கரையொட்டி 7 கோயில்களை கட்டியதாக வரலாறு கூறுகிறது. கடல் முன்னோக்கி வந்ததால் 6 கோயில்கள் கடலில் மூழ்கியது. இதில், மீதம் இருந்த ஒரே ஒரு கோயில் தான் கடற்கரை கோயிலாகும்.

இக்கோயிலை, பாதுகாக்கவும், அதில் இருந்த ஜலசயன பெருமாள் கடலில் அடித்து சென்று விடுவாரோ என்ற அச்சத்தில் பல்லவ மன்னர்கள் மாமல்லபுரத்தின் மைய பகுதியான அர்ஜூனன் தபசு அருகே கடற்கரை கோயிலில் ஜலசயன பெருமாள் உள்ளது போன்று, இங்கு கோயில் கட்டி சிலை அமைத்து தலசயன பெருமாள் என பெயரிட்டனர். இக்கோயிலில், தலசயன பெருமாள் ஒரு கையை பூமியில் ஊன்றியும், மற்றொரு கையை பக்தர்களை வா என்று அழைக்கும் படியும், மற்ற இரண்டு கைகளை அருகில் வைத்துக் கொண்டு காட்சி தருகிறார். இந்த கோயில், இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இங்கு, 1998ம் ஆண்டு பாலாலயம் செய்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

அதன் பிறகு, கடந்த 25 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடக்காமல் உள்ளது. இங்கு பழமை மாறாமல் கோயிலில் திருப்பணி மேற்கொண்டு பாலாலயம் செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கடந்த 2021ம் ஆண்டு ஆய்வு செய்து ரூ.63 லட்சம் நிதி ஒதுக்கினார். இதையடுத்து, கடந்த 2021ம் ஆண்டு மாமல்லபுரத்தில் உள்ள உள்ளூர் பட்டாச்சாரியார்கள் ஒன்றிணைந்து சென்னை திருநீர்மலை, காஞ்சிபுரம், நாமக்கல், கும்பகோணம், பண்ருட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்களை அழைத்து வந்து, யாக குண்டம் வளர்த்து பாலாலயம் செய்து கருவறையை மூடினர். தொடர்ந்து, மூலவரை தற்காலிகமாக இடமாற்றம் செய்து கருவறைக்கு அருகே கண்ணாடி அறையில் வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருப்பணி மேற்கொள்ள கோயில் கோபுரத்தை சுற்றி சாரம் அமைத்து பணிகள் துரிதமாக நடந்து வந்தநிலையில், தற்போது பணிகள் முடங்கி 2 ஆண்டுகளாக பெயரளவுக்கு ஆமை வேகத்தில் நடக்கிறது. இதனால், திருப்பணிகளை முழுமையாக முடித்து கும்பாபிஷேகம் நடத்துவதில் மிகப் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. தாமதமாக நடக்கும் திருப்பணியால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் கவலை அடைந்துள்ளனர். உள்ளூர் மக்கள், கோயில் பக்தர்கள் திருப்பணியை விரைந்து முடித்து இந்தாண்டு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பல முறை இந்துசமய அறநிலையத் துறைக்கும், கோயில் நிர்வாகத்துக்கும் கோரிக்கை விடுத்தும், இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் கண்டும் காணாதது போல் மெத்தனமாக உள்ளனர்.

மேலும், திருப்பணி என்ற பெயரில் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளும், கோயிலில் வேலை பார்க்கும் ஒருவருக்கு நெருக்கமானவர் ஆகியோர் இணைந்து வாட்ஸ் ஆப் குழு உருவாக்கி கோயிலின் புகைப்படத்தை போட்டோ எடுத்து அக்குழுவில் பதிவிட்டு மெகா வசூல் வேட்டை நடத்தப்படுவதாகவும், அதற்காக தான் திருப்பணியை ஆமை வேகத்தில் நடப்பதாகவும் பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து, கோயில் நிர்வாகத்திடம் கேட்டபோது, திருப்பணி நடந்து கொண்டிருக்கிறது. பணி முடியுமா? அல்லது முடியாதா? என எங்களுக்கு தெரியவில்லை.

இந்தாண்டு, கும்பாபிஷேகம் நடத்துவதற்கு வாய்ப்பு குறைவு தான் என்றனர். எனவே, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இந்து சமய வல்லுநர் குழுவை நேரில் அழைத்து வந்து ஆய்வு செய்து பணிகளை முழுமையாக முடித்து இந்தாண்டு இறுதிக்குள் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* பட்டாச்சாரியார்கள் குற்றச்சாட்டு
கடந்த 2021ம் ஆண்டு யாக குண்ட அனலில் வெந்து யாகம் வளர்த்து பாலாலயம் செய்த பட்டாச்சாரியார்களுக்கு வழங்க வேண்டிய ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்தில், ரூ.3 லட்சத்தை கொடுத்து மீதமுள்ள ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை கோயில் நிர்வாகம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக பட்டாச்சாரியார்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, பட்டாச்சாரியார்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை வழங்க அமைச்சர் சேகர்பாபு தலசயன பெருமாள் கோயில் நிர்வாகத்துக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என பட்டாச்சாரியார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post இந்தாண்டு கும்பாபிஷேகம் நடத்துவதில் சிக்கல் ஆமை வேகத்தில் தலசயன பெருமாள் கோயில் திருப்பணி: விரைந்து முடிக்க பக்தர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kumbabishekam ,Thalasayana Perumal temple ,Mamallapuram ,
× RELATED வேதாரண்யம் அருகே பழமை வாய்ந்த அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்