×

த்ரெட்ஸ் சமூக வலைதளம் துவக்கம் மெட்டா மீது வழக்கு தொடர போவதாக டிவிட்டர் மிரட்டல்

நியூயார்க்: மெட்டா நிறுவனம் மீது டிவிட்டர் நிறுவனம் வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளது. உலகின் முன்னணி இணையதள சமூக வலைதளமாக விளங்கும் டிவிட்டர் நிறுவனத்திற்கு மிகப்பெரும் போட்டியாக மார்க் ஜுகர்பெர்கின் மெட்டா நிறுவனம் ‘த்ரெட்ஸ்’ எனும் வலைதளம் துவங்கப்பட்டுள்ளது. ‘த்ரெட்ஸ்’ துவங்கிய 2 நாளில் இதுவரை 5 கோடி பேர் அதில் இணைந்துள்ளனர். இந்நிலையில் டிவிட்டர் நிறுவனம், மெட்டாவின் சிஇஓ மார்க் ஜூகர்பெர்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. அதில், கடந்த சில ஆண்டுகளாகவே மெட்டா நிறுவனம், டிவிட்டரின் முன்னாள் ஊழியர்களை பணியில் சேர்த்துள்ளது. இந்த ஊழியர்களின் உதவியுடன் டிவிட்டரின் வர்த்தக ரகசியங்கள், மற்ற ரகசிய தகவல்களையும் பயன்படுத்தி வெகு சில நாட்களில் ‘த்ரெட்ஸ்’ உருவாக்கப்பட்டுள்ளது. அதுவும் டிவிட்டரை அப்படியே பிரதி எடுத்தது போல.

இதை தெரிந்தே மெட்டா செய்துள்ளது. அதனால் வழக்கு தொடர உள்ளோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து எலான் மஸ்க் பதிவிடுகையில், போட்டி நல்லது ஆனால் ஏமாற்றுவது நல்லதல்ல என பதிவிட்டுள்ளார். ஆனால், மெட்டா செய்தித்தொடர்பாளர் ஒரு த்ரெட்ஸ் பதிவில் த்ரெட்ஸ் வலைதளத்திற்காக பணியாற்றும் பொறியியல் குழுவில் முன்னாள் டிவிட்டர் ஊழியர் யாரும் இல்லை என தெரிவித்துள்ளார்.

* த்ரெட்ஸ்சில் இணைந்த இந்திய பிரபலங்கள்

இந்தியாவில் த்ரெட்ஸ்சுக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது. ஒன்றிய அமைச்சர்கள் ஜெய்சங்கர், பியூஷ் கோயல், நிதின்கட்கரி, பிரகலாத் ஜோஷி, கிரிராஜ்சிங், கஜேந்திரசிங் ஷெகாவத், ஆந்திர முதல்வர் ஜெகன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், மேற்கு வங்க முதல்வர் மம்தா, கேரளா முதல்வர் பினராயி விஜயன், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, கோவா முதல்வர் பிரமோத் சவாந்த் உள்ளிட்டோரும் இணைந்துள்ளனர். கிரிக்கெட் வீரர்கள், சினிமா நடிகர், நடிகைகளும் இதில் இணைந்துள்ளனர். இந்தி இயக்குனர் கரண் ஜோஹர், கிரிக்கெட் வீரர்கள் ஷிகர் தவான், ரிசப் பந்த், சுரேஷ் ரெய்னா, நடிகைகள் கஜோல், மாதுரி தீட்சித், நடிகர்கள் அபிஷேக் பட்சன், அல்லு அர்ஜூன், ஜூனியர் என்டிஆர், டாப்சி பன்னு, சிரஞ்சீவி, தமன்னா பாட்டியா, மகேஷ்பாபு, மிருனல் தாக்கூர், அலி பைசல், சோனாக்‌ஷி சின்கா, பிரணிதி சோப்ரா உள்ளிட்டோரும் இதில் இணைந்துள்ளனர்.

The post த்ரெட்ஸ் சமூக வலைதளம் துவக்கம் மெட்டா மீது வழக்கு தொடர போவதாக டிவிட்டர் மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Twitter ,New York ,Meta ,Dinakaran ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்