×

சில்லி பாயிண்ட்….

* பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்ற சீனியர் மற்றும் மாஸ்டர்ஸ் தேசிய கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப்பில் (ஜூலை 1-5) தமிழ்நாடு சாார்பில் 20 வீராங்கனைகள் உட்பட 73 பேர் பங்கேற்றனர். மொத்தம் 27 மாநிலங்கள் பங்கேற்ற இப்போட்டியில் தமிழ்நாடு 14 தங்கம், 18 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 52 பதக்கங்களை வென்று 3வது இடம் பிடித்தது. 24 தங்கங்களுடன் பஞ்சாப் முதலிடத்தையும், 20 தங்கங்களுடன் மகாராஷ்டிரா 2வது இடத்தையும் பிடித்தன. தங்கப்பதக்கம் வென்றவர்கள் நவ.17 முதல் நவ.26 வரை போர்ச்சுகலில் நடைபெறும் உலக கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தேர்வாகி உள்ளனர்.

* தமிழ்நாடு டென்பின் பவுலிங் சங்கம் சார்பில் மாநில அளவிலான 3வது தரவரிசைப் போட்டி சென்னையில் நடந்தது. பைனலில் முன்னாள் சாம்பியன் யூசப் சபீர் 384 – 355 என்ற புள்ளிக் கணக்கில் என்.டி.கணேசை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். முதல் 2 இடங்களை பிடித்த இந்த இருவருக்கும் திரைப்பட இயக்குநர் ரோகின் வெங்கடேசன் பரிசுகளை வழங்கினார்.

* சீனாவின் ஹாங்ஸூ நகரில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டு போட்டியில் (செப். – அக்.) இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் பங்கேற்க பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது. ஆண்கள் பிரிவில் இந்தியா-ஏ அணி வீரர்களும், மகளிர் பிரிவில் முழு பலத்துடன் கூடிய இந்திய அணியும் தேர்வு செய்யப்பட உள்ளன. ஐபிஎல் தொடரில் அறிமுகமான ‘தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்’ விதிமுறை முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரிலும் கடைப்பிடிக்கப்படும் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

* வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வேண்டுகோளை ஏற்று, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் தனது முடிவை மாற்றிக்கொள்வதாக தொடக்க வீரர் தமிம் இக்பால் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானுடன் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 17 ரன் வித்தியாசத்தில் தோற்றதும், தமிம் கண்ணீர் மல்க ஓய்வு முடிவை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

* சென்னையின் எப்சி கால்பந்து அணிக்காக விளையாட கோல் கீப்பர் பிரதீக் குமார் சிங், தற்காப்பு வீரர் சச்சு சிபி இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

* ஆலூர் கேஎஸ்சிஏ மைதானத்தில் மத்திய மண்டல அணிக்கு எதிராக நடக்கும் துலீப் டிராபி அரையிறுதியின் முதல் இன்னிங்சில் மேற்கு மண்டலம் 220 ரன் எடுக்க, மத்திய மண்டலம் 128 ரன்னில் சுருண்டது. 92 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய மேற்கு மண்டலம் 3ம் நாள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 292 ரன் குவித்துள்ளது. புஜாரா 133 ரன் விளாசி ரன் அவுட்டானார். சூரியகுமார் 52, பிரித்வி ஷா 25, ஹெட் படேல் 27 ரன் எடுத்தனர். கை வசம் 1 விக்கெட் இருக்க, மேற்கு மண்டலம் 384 ரன் முன்னிலை பெற்றுள்ளது.

* பெங்களூர் எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் வடக்கு மண்டல அணியுடன் மோதும் தென் மண்டல அணிக்கு 215 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. முதல் இன்னிங்சில் வடக்கு மண்டலம் 198 ரன்னுக்கும், தென் மண்டலம் 195 ரன்னுக்கும் சுருண்டன. 3 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய வடக்கு மண்டலம் 211 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. 215 ரன் இலக்கை துரத்தும் தென் மண்டலம், 3ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன் எடுத்துள்ளது.

 

The post சில்லி பாயிண்ட்…. appeared first on Dinakaran.

Tags : Silly ,Point… ,Tamil Nadu ,Senior and ,Masters National Kickboxing Championship ,Jalandhar, Punjab ,Dinakaran ,
× RELATED சில்லி பாய்ன்ட்…