×

கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: மன அழுத்தத்தால் விபரீத முடிவு; 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் சொந்த ஊரில் தகனம்

கோவை: கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் சொந்த ஊரில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் தோளில் சுமந்து சென்று இறுதி மரியாதை செலுத்தினர். கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்தவர் விஜயகுமார் (45). இவர், தேனி மாவட்டம் போடி அருகே உள்ள அணைக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். இவரது மனைவி கீதாவாணி. பல் டாக்டர். தம்பதிக்கு நந்திதா (18) என்ற ஒரு மகள் உள்ளார். இவர், நீட் தேர்வு எழுதி உள்ளார். விஜயகுமார் தனது மனைவி, மகளுடன் கோவை ரேஸ்கோர்ஸ் முகாம் அலுவலகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தார். இவரது தந்தை செல்லையா, கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது தாய் ராசாத்தி, ஓய்வு பெற்ற ஆசிரியை. விஜயகுமாருக்கு லதா, நிர்மலா என்ற இரு சகோதரிகள் உள்ளனர்.

விஜயகுமார், தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வில் கடந்த 2003ம் ஆண்டு தேர்ச்சி பெற்று டிஎஸ்பியாக பணியில் சேர்ந்தார். அப்போதுதான் இவருக்கு திருமணம் ஆனது. அவர் காவலர் நலன் பிரிவு ஏடிஎஸ்பியாக பதவியில் இருந்தபோது யுபிஎஸ்சி தேர்வு எழுதி கடந்த 2009ம் ஆண்டு ஐபிஎஸ் ஆக தேர்ச்சி பெற்றார். இவர், காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
சென்னையில் அண்ணாநகர் துணை ஆணையராக பணியாற்றி வந்த இவருக்கு, கடந்த ஜனவரி மாதம் பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி, கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை சரக டிஐஜியாக கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி பொறுப்பேற்று பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் அவர் கோவை ரேஸ்கோர்சில் உள்ள முகாம் அலுவலகத்துக்கு அருகே உள்ள தனது வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர் ரவியிடம் இருந்து திடீரென கைத்துப்பாக்கியை வாங்கி தலையில் சுட்டுக்கொண்டார். அவரது வலதுபக்க தலையில் சுட்டதில் குண்டு இடதுபக்கம் துளைத்து வெளியேறியதில் அவர் பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து பாதுகாவலர் ரவி அதிர்ச்சி அடைந்தார். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது டிஐஜி விஜயகுமார் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.

இதை தொடர்ந்து அங்கிருந்த பாதுகாப்பு போலீசார், ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு ஆம்புலன்சில் விரைந்து வந்த ஊழியர்கள் அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், டிஐஜி விஜயகுமார் கடந்த சில மாதங்களாக மன அழுத்தம் காரணமாக சரியாக தூக்கம் இல்லாமல் தவித்ததால் ஆயுர்வேத மருந்தை சாப்பிட்டு வந்ததாகவும், இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டிஐஜி விஜயகுமாரின் உடலை கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு மருத்துவர் பாலா மற்றும் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் தலைமையிலான குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். இந்த பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. அவரது உடலுக்கு தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், கோவை மாநகர துணை கமிஷனர்கள் சந்தீஷ், சண்முகம், கோவை மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன், நீலகிரி எஸ்பி பிரபாகர், ஈரோடு எஸ்பி ஜவகர் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், தேனி ரத்தினம் நகரில் உள்ள விஜயகுமாரின் பெற்றோர் வீட்டிற்கு நேற்று பிற்பகல் 3.45 மணிக்கு கோவையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக அவரது உடல் கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு தமிழக அரசின் சார்பில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, விஜயகுமாரின் தந்தை, தாயார் உள்ளிட்டோருக்கு ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து தமிழ்நாடு போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால், தென்மண்டல போலீஸ் ஐஜி அஸ்ரா கார்க், திண்டுக்கல் சரக போலீஸ் டிஐஜி அபிநவ்குமார், தேனி எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்கரே மற்றும் போலீஸ் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அப்போது டிஐஜி விஜயகுமாரின் சகோதரிகள் டிஜிபி சங்கர் ஜிவாலிடம் கதறி அழுதனர். அவர்களுக்கு அவர் ஆறுதல் கூறினார். பின்னர், அவரது உடல் ஊர்வலமாக மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மயானத்தில் 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் விஜயகுமாரின் உடல் தகனம் செய்யப்பட்டது. டிஐஜி விஜயகுமாரின் உடலுக்கு அவரது மகள் நந்திதா தீ மூட்டினார். தகனத்திற்கான ஏற்பாடுகளை தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் மற்றும் மின் மயானத்தை பராமரிக்கும் அல்லிநகரம் கிராம கமிட்டியினர் செய்திருந்தனர்.

* உடலை தோளில் சுமந்த டிஜிபி, ஐஜி, எஸ்பிக்கள்
விஜயகுமாரின் உடலுக்கு சொந்த ஊரில் உற்றார் உறவினர்கள் இறுதி மரியாதை செலுத்தியதை தொடர்ந்து அவரது உடலை டிஜிபி சங்கர் ஜிவால், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், தேனி எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்கரே, திண்டுக்கல் எஸ்பி பாஸ்கர் மற்றும் போலீசார் சுமந்து வந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏற்றினர்.

* மனைவியிடம் 20 நிமிடம் விசாரணை
டிஐஜி விஜயகுமாரிடமிருந்து கைப்பற்றிய அவரது மொபைல் போனை, விசாரணை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அப்போது அவர் தனது மனைவியுடன் கடைசியாக செல்போனில் பேசியுள்ளார். இதன் அடிப்படையில் அவரது மனைவி கீதாவாணியிடம் விசாரணை நடத்துவதற்காக, அவரை போலீசார் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்துக்கு நேற்று அழைத்துச்சென்றனர். ஆய்வாளர் அறையில் அமரவைத்து, அவரிடம் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையிலான விசாரணை அதிகாரிகள், சுமார் 20 நிமிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவரிடம், விஜயகுமாருக்கு ஏதாவது பிரச்னை இருந்ததா, மனஅழுத்தம் இருந்ததாக கூறப்படுகிறதே, அது எவ்வளவு நாளாக இருந்தது, அதுபற்றி ஏதாவது உங்களிடம் தெரிவித்தாரா என பல்வேறு கேள்விகள் கேட்டனர். அதற்கு அவர், ‘எல்லா குடும்பத்திலும் கணவன்-மனைவிக்கு இடையே சிறு சிறு பிரச்னை ஏற்படுவது இயல்புதானே, அது உடனுக்குடன் சரியாகிவிடும். அவர், தற்கொலை செய்யும் அளவுக்கு அப்படி எதுவும் பெரிய பிரச்னை இருந்ததாக எனக்கு தெரியவில்லை’ எனக் கூறியுள்ளார்.

* பவாரியா உள்ளிட்ட முக்கிய வழக்குகளை கையாண்டவர்
விஜயகுமாரின் பணி காலத்தில் தமிழகத்தை கலக்கிய பவாரியா கும்பலை பிடிக்க அப்போதைய போலீஸ் அதிகாரி ஜாங்கிட் தலைமையிலான குழுவில் இடம்பெற்று குற்றவாளிகளை கைது செய்தார். காஞ்சிபுரம் எஸ்பியாக விஜயகுமார் இருந்தபோது, கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் நிறுவனர் சிவசங்கர் பாபாவை கைது செய்தார். இதேபோன்று நீட் தேர்வு மோசடி, சாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை கொலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளை திறம்பட கையாண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

* ‘சிறுவயதிலேயே ஐபிஎஸ் கனவு’
விஜயகுமார் உறவினர்கள் கூறுகையில், ‘‘சிறுவயது முதலே விஜயகுமாருக்கு ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற ஆர்வம் இருந்துள்ளது. அர்ஜூனனுக்கு கிளியின் கண் மட்டும் தெரிவதுபோல் அவருக்கு ஐபிஎஸ் மட்டும் தான் இலக்காக இருந்தது. அதனால் தான் சொந்த மாநிலத்திலேயே ஐபிஎஸ் அதிகாரி ஆனார். இலக்கை நோக்கி விடாமுயற்சியோடு ஓடிக்கொண்டே இருந்தேன். நான் நினைத்த ஐபிஎஸ் எனக்கு வசமாகி விட்டது. ஐபிஎஸ் என் கனவு. அதுபோல் இலக்கையும் கனவையும் ஒன்றாக வையுங்கள் என இளைஞர்களை உற்சாகப்படுத்த அவர் அடிக்கடி கூறும் நம்பிக்கை வார்த்தைகள் இவை’’ என்றனர்.

* கடைசியாக பிறந்த நாள் விழாவில் பங்கேற்பு
கோவை மாநகர காவல்துறையில் வடக்கு பகுதி போலீஸ் துணை கமிஷனராக பணிபுரியும் சந்தீஷ் மகன் பிறந்த நாள் விழா கோவையில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த விழாவில், டிஐஜி விஜயகுமார் பங்கேற்றுள்ளார். துணை கமிஷனர் மகனுக்கு பரிசுப்பொருட்கள் வாங்கிக்கொடுத்து மகிழ்ந்துள்ளார். இதுவே, அவர் பங்கேற்ற கடைசி நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. இந்த விழாவில் அவர், கலகலப்பாக பேசுவதை தவிர்த்துவிட்டு, மன இறுக்கத்துடன் காணப்பட்டுள்ளார். இதை, சக போலீஸ் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

* எதையும் எதிர்கொள்ளக்கூடியவர்
விஜயகுமாரின் தங்கை கணவர் இளங்கோவன் கூறுகையில், “கடந்த 10 நாட்களுக்கு முன்பு கூட தேனிக்கு வந்தார். மராமத்து செய்யப்பட்ட அவரின் வீட்டைப் பார்த்துவிட்டு எல்லோரிடமும் நன்றாகப் பேசிவிட்டுச் சென்றார். நேற்று கூட செல்போனில் நன்றாகப் பேசிக்கொண்டிருந்தார். யாரையும், எதையும் எதிர்கொள்ளக்கூடியவர். அவரின் மகள் மீது அதிக பாசம் கொண்டிருந்தார். அவரின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை” எனக் கண் கலங்கினார்.
விஜயகுமாரின் நண்பர்கள் கூறுகையில் “பள்ளி காலங்களிலிருந்து துடிப்புமிக்கவராக இருப்பார். எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருக்கக்கூடியவர். சிறு வயதிலிருந்து எவ்வித கெட்டப்பழக்கங்களும் அவருக்கு இருந்தது இல்லை. பெற்றோர், மனைவி, குழந்தையிடம் மிகவும் பாசம் கொண்டிருந்தார். யார் உதவி கேட்டாலும் செய்து கொடுப்பார். பெரும் முயற்சி எடுத்துதான் காவல் அதிகாரியாக ஆனார். அவருக்கு எதையும் சமாளிக்கக்கூடிய திறன் இருந்தது. எல்லோருக்கும் உத்வேகம், ஆலோசனை, தைரியம் கொடுக்கக் கூடியவரின் மரணம் எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது” என்றார்.

* மன அழுத்தத்துக்கு 2 ஆண்டு சிகிச்சை-ஏடிஜிபி அருண் தகவல்
சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் கோவை ரேஸ்கோர்சில் உள்ள டிஐஜி அலுவலகம் மற்றும் டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் நடந்த விவரத்தை கேட்டறிந்து விசாரணை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்கொலை செய்து கொண்ட விஜயகுமார், கடந்த 2009ம் ஆண்டு காவல் துறையில் பணிக்கு சேர்ந்தார். திறமையான அதிகாரி. அர்ப்பணிப்பு உணர்வுடன் சிறப்பாக பணியாற்ற கூடியவர். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரிக்கும்போது மன அழுத்தம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அவர் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது. மேலும், கடந்த சில நாட்களாக அவர் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானதால், அவரது மனைவி சென்னையில் இருந்து கோவைக்கு வந்து அவருடன் தங்கி இருந்துள்ளார். நேற்று முன்தினம் ஐஜி சுதாகர், மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் ஆகியோர் அவரிடம் பேசி உள்ளனர். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு பணி சுமையோ, குடும்ப பிரச்னையோ காரணம் இல்லை. மன அழுத்தமே காரணம். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு கூடுதல் டிஜிபி அருண் கூறினார்.

* ஒரே மகளை டாக்டர் ஆக்க ஆசைப்பட்டார்
கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் ஒரே மகள் நந்திதா (18). இவரை, டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என டிஐஜி விஜயகுமார் ஆசைப்பட்டார். பிளஸ் 2 படித்து முடித்த பிறகு, நீட் தேர்வு எழுதி, தேர்வாகியுள்ள மகளை, எந்த கல்லூரியில் சேர்க்கலாம் என்பது பற்றி ஆலோசித்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் அவர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நீட் முறைகேடு வழக்கில் தீவிரமாக துப்பு துலக்கி, பல்வேறு தகவல்களை திரட்டிய இவர், செக்ஸ் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபா வழக்கையும் திறமையாக கையாண்டார். இவரது தந்தை, கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். அவருக்கு, ஒரே மகனாக பிறந்தார் டிஐஜி விஜயகுமார். இவருக்கும் ஒரே மகள் நந்திதா என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த உலகம் ஒரு மாயை இழப்பதற்கு ஒன்றுமில்லை: விஜயகுமாரின் கடைசி பதிவு
டிஐஜி விஜயகுமார் சமூக ஊடகங்கள் வாயிலாக தனது கடைசி பதிவை ஆடியோ மூலமாக வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு: நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த உலகமே ஒரு மாயை. நடப்பது எல்லாமே மாயையின் சாயல்கள். இப்படி ஒரு தத்துவம்… ஞானம்… நிறைய பேருக்கு தெரியவில்லை. அப்படி தெரிந்தாலும், புரியவில்லை. உலகம் மாயை என்றால், நான் இந்த பூமியில் வாழ்வது, நிலைத்து நிற்பது உண்மையா, இல்லையா? அப்படீன்னு… நிறைய பேர் என்னிடம் கேள்வி கேட்பார்கள். நம்பினாலும், நம்பாவிட்டாலும், அது உண்மை… ஒரு பூனை இறந்துபோச்சே என வருத்தம் கொள்ள தேவையில்லை. அதற்கு பதிலாக வேறு ஒரு பூனையை இறைவன் அனுப்புகிறார். இப்படி தொடர்ச்சியாக உலகம் சுழன்றுகொண்டே இருக்கிறது. இந்த ஞானம் வந்துவிட்டால், இழந்தோம்… முடிந்தது… என்ற கவலையே வராது. நல்வாழ்த்துகள் நண்பர்களே…!

* நடைபயிற்சியை தவிர்த்தார்
கோவை சரக டிஐஜி விஜயகுமார், ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனது முகாம் அலுவலகத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரை நடைபயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். ஆனால், குடும்பத்தில் ஏற்பட்ட சிறு சிறு பிரச்னை மற்றும் மன உளைச்சல் காரணமாக கடந்த மூன்று தினங்கள் நடைபயிற்சிக்கு செல்லாமல் இருந்துள்ளார். மூன்று தினங்கள் கழித்து நேற்றுதான் மீண்டும் நடைபயிற்சியை துவக்கியுள்ளார். ஆனாலும், நடைபயிற்சியை முழுமையாக முடிக்காமல், பாதியிலேயே நிறுத்திவிட்டு, இந்த விபரீத முடிவை மேற்கொண்டுள்ளார்.

The post கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: மன அழுத்தத்தால் விபரீத முடிவு; 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் சொந்த ஊரில் தகனம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore Cargo ,Vijayakumar ,Coimbatore ,Dinakaran ,
× RELATED கேளம்பாக்கம் அருகே மனைவி கழுத்து...