×

தொடர் மழையால் குண்டாறு அணை நிரம்பியது: பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

செங்கோட்டை: செங்கோட்டை அருகே 36 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை, கடந்த இருநாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் நிரம்பியது. இதனால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே 36 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை அமைந்துள்ளது. இதன்மூலம் 12 குளங்கள் பயன்பெறுகின்றன. இக்குளங்களின் வாயிலாக சுமார் 1,122 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தென்காசி மாவட்டத்திலேயே மிகவும் குறைந்த கொள்ளளவு கொண்ட அணை என்பதால் பருவமழை துவங்கியதும் முதலில் நிரம்புவது இந்த அணையே ஆகும். மேலும் இந்த அணையின் மூலம் கண்ணுபுளி மெட்டு, இரட்டைகுளம், வல்லம், புதூர், செங்காட்டை ஆகிய பகுதிகளும் பயன்பெறுகின்றன.

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரு நாட்களாகப் பெய்துவரும் தொடர்மழையால் குண்டாறு அணை நிரம்பத்துவங்கியது. குறிப்பாக அணைக்கு வந்துசேரும் 100 கன அடி தண்ணீரானது அதே அளவுக்கு வெளியேற்றப்பட்டது. அத்துடன் குண்டாறு அணையில் பெருக்கெடுத்த தண்ணீர் அருகேயுள்ள கால்வாய் மூலம் குளங்களுக்கு செல்ல துவங்கியதால் அனைத்து குளங்களிலும் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொதுவாக தென்காசி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன். ஜூலை. ஆகஸ்ட் மாதங்களில் வழக்கமாக பருவமழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட ஒரு மாதம் தாமதமாக ஜூலை 2ம் தேதி தான் பருவமழை பெய்யத் துவங்கயுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post தொடர் மழையால் குண்டாறு அணை நிரம்பியது: பாசன விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Gundaru dam ,Sengottai ,Dinakaran ,
× RELATED பறவை காய்ச்சல் எதிரொலி தமிழக-கேரள...