×

கொடுத்து மகிழும் குர்பானி!

இஸ்லாம் சமூகத்தில் ரம்ஜானுக்கு அடுத்து முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுவது பக்ரீத். ரம்ஜானைப்போலவே இந்த பண்டிகையில் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை செய்து கொண்டாடுவர். இதில் கூடுதல் ஸ்பெஷல் குர்பானிதான். பக்ரீத் என்றாலே அனைவருக்கும் குர்பானி நினைவுக்கு வந்துவிடும். இறை தூதரான இப்ராகிம் நபிகள் – ஆசரா தம்பதியர்க்கு இஸ்மாயில் என்ற மகன் பிறக்கிறான். செல்லமாக வளர்ந்து வந்த குழந்தையைப் பலியிட வேண்டும் என இப்ராகிமின் கனவில் இறைவன் கட்டளையிட்டதாக கூறுகிறார்கள். இதனால் தன் மகன் இஸ்மாயிலை அவனது ஒப்புதலோடு, பலியிட துணிகிறார் இப்ராகிம். அப்போது வானத்தில் இறங்கி வந்த தூதர் ஒருவர் இந்த ஆட்டை மட்டும் பலியிடுங்கள் போதும் என்று கூறி, ஒரு ஆட்டை வழங்கிவிட்டு மறைகிறார். அந்த ஆட்டைப் பலியிட்டு இறைவனின் கட்டளையை நிறைவேற்றுகிறார் இப்ராகிம். இப்ராகிமின் இந்த தியாக சம்பவத்தை நினைவுகூரவே பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அன்றைய நாளில் ஒட்டகத்தைப் பலியிட்டு, அதன் இறைச்சியை ஏழை, எளியவர்களுக்கு பகிர்ந்து மகிழ்வார்கள். இதற்கு பெயர்தான் குர்பானி. குர்பானி என்றதும் பெயர் மட்டுமல்ல, அதன் பொருளுமே பலருக்கு புரியாத மாதிரி இருக்கும். குர்பானி என்றால் இஸ்லாமில் கடவுளுக்கு படைக்கப்படுகிற அல்லது பலியிடப்படுகிற மாமிசம்தான். குர்பானிக்கு கொடுக்கப்பட வேண்டிய பிராணிகள் என தனியாக இருக்கிறது. ஆடு, மாடு, ஒட்டகம் இவை மூன்றையும் குர்பானி கொடுக்கலாம். அவ்வாறு குர்பானி கொடுக்கப்படுகிற பிராணிகளில் ஒட்டகம் 5 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். ஆடு, மாடு பலியிடும்போது அவை 2 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். இதுதான் நபிகளின் வாக்கு. அதேபோல, குர்பானி கொடுக்கப்படுகிற பிராணிகளுக்கு குட்டிகள் இருந்தால் அதுவும் பால் குடிக்கும் பருவத்தில் இருந்தால் அந்த பிராணியை குர்பானி கொடுக்கக்கூடாது. இந்த குர்பானியில் இருக்கிற சுவாரஸ்யம் என்னவென்றால் கடவுளுக்கு குர்பானி கொடுக்கும் மாமிசத்தை மூன்று அல்லது நான்கு பேர் சேர்ந்து ஒன்றாக வாங்குவார்கள்.

பிறகு அதைக் கடவுளுக்கு படைத்துவிட்டு எல்லோருடனும் சேர்ந்து பங்கிட்டுக் கொள்வார்கள். தெரிந்த பலருக்கும் தானம் செய்வார்கள். இப்படி கடவுளுக்கு படைக்கப்பட்ட உணவை பலரோடு பங்கிட்டு சாப்பிடுவதில்தான் உண்மையான கொண்டாட்டமே இருக்கிறது. பக்ரீத் வந்த உடனையே ராஜஸ்தானில் இருந்து ஒட்டகங்கள் தமிழ்நாட்டுக்கு வந்துவிடும். சிலர் ராஜஸ்தானில் இருந்து நடந்தபடியே ஒட்டகத்தை வாங்கி வந்த செய்தி எல்லாம் இருக்கிறது. அதேபோல, இங்கிருக்கிற மாடுகள், ஆடுகள் கூட குர்பானி கொடுப்பதற்காக வாங்கப்படுகிறது. பிறகு அவை கடவுளுக்கு படைக்கப்படுகிறது. குர்பானி கொடுக்கப்பட்ட இறைச்சியில் பிரியாணி உள்ளிட்ட சுவையான உணவுகளை செய்து அதையும் பலருக்கு வழங்கி மகிழ்கிறார்கள். குர்பானி என்பதற்கு தியாகம் என்கிற பொருளும் உண்டு. அதனால்தான் பக்ரீத் பண்டிகையை தியாகப் பெருநாள் என அழைக்கிறார்கள். எல்லா சமூகத்திலுமே படையல் கலாச்சாரம் இருக்கிறது. இறையை வணங்கி மனிதனை நினைப்பதுதான் அனைத்து மதமும் நமக்கு வழங்கும் செய்தி. அதுதான் உண்மையும் கூட.

சுவையான ரெசிபிகள்

கத்திரிக்காய் கோசுமல்லி

தேவையான பொருட்கள்

கத்திரிக்காய் – 3
தக்காளி – 1
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 4
காய்ந்த மிளகாய் – 4
உளுந்து – ½ ஸ்பூன்
கடுகு – 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிது
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 1 ஸ்பூன்.

செய்முறை:

குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, கத்திரிக்காய், மஞ்சள் தூள் வதக்கி உப்பு சேர்த்து 5 விசில் விடவும். வெந்ததும் மத்து வைத்து மசித்துக்கொள்ளவும். கத்திரிக்காய் கோசுமல்லி ரெடி.

இறால் கிழங்கு பொரியல்

தேவையான பொருட்கள்

இறால் – 250 கிராம்
உருளைக்கிழங்கு – 150 கிராம்
பெரிய வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 3
தக்காளி – ஒன்று
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மிளகாய்தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
மிளகு, சீரகத்தூள் – ஒரு ஸ்பூன்
எண்ணெய் – 4 அல்லது 5 டீஸ்பூன்
உப்பு – 3/4 ஸ்பூன்.

செய்முறை

முதலில் இறாலை சுத்தம் செய்து, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு, சீரகத்தூள், உப்பு போட்டு பிரட்டிக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கை ஒரு இன்ச் அளவில் கட்டம் கட்டமாக வெட்டிக் கொண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அவற்றை இறாலோடு சேர்த்து ஒரு வாணலியில் போட்டு, 4 அல்லது 5 டீஸ்பூன் எண்ணெய் விட்டு அத்துடன் அரை கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும். சுமார் 5 நிமிடம் கழித்து, கிழங்கு வெந்துவிட்டதை உறுதி செய்த பிறகு அடுப்பை அணைத்து விடலாம். இது ரசம், சாம்பார் போன்றவற்றோடு சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். இறால் நீர்ச்சத்துள்ள உணவாக இருப்பதால் வேக வைக்கும்போது அதிகம் நீர் சேர்க்கக்கூடாது. காரம் அதிகம் விரும்பாதவர்கள் அதில் சேர்க்கும் பச்சை மிளகாய் அல்லது மிளகாய்தூளின் அளவை தேவைக்கேற்ப குறைத்துக் கொள்ளலாம்.

The post கொடுத்து மகிழும் குர்பானி! appeared first on Dinakaran.

Tags : Ramjan ,Ramjana ,Dinakaran ,
× RELATED ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு...