×

திருநள்ளாறு அருகே ஓடும் பஸ்சில் கழன்று விழுந்த சக்கர நட்டுகள்

*50க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர்

காரைக்கால் : திருநள்ளாறு அருகே பிஆர்டிசி பேருந்து ஓடிக்கொண்டிருக்கும்போதே சக்கரத்தின் நட்டுகள் கழன்று விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.காரைக்காலில் இருந்து திருநள்ளாறு அடுத்த அம்பகரத்தூர் பகுதிக்கு தினமும் புதுச்சேரி அரசுக்கு சொந்தமான பி.ஆர்.டி.சி கே-1 அரசு பேருந்து சென்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் காரைக்காலில் இருந்து அம்பகரத்தூருக்கு புறப்பட்ட பி.ஆர்.டி.சி பேருந்து சேத்தூர் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தது.

பேருந்தின் ஓட்டுநராக ஆனந்த் மற்றும் நடத்துனராக மதியழகன் என்பவரும் இருந்தனர். பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். சேத்தூர் பகுதியை கடக்கும் பொழுது பேருந்தின் முன் பக்கத்தில் இருந்து ஒருவித சத்தம் வந்தது. இதனால் சுதாரித்த ஓட்டுநர் ஆனந்த் பஸ்சை ஓரமாக நிறுத்தி பார்த்தார். அப்போது பேருந்தின் வலது புறம் இருந்த முன் சக்கரத்தின் நட்டுகள் தானாக கழன்று கீழே விழுந்து காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அதிகாரிக் விசாரணை நடத்தினர். இதில் அந்த பஸ்சை மதகடியில் உள்ள பணிமனையில் இருந்து மதியம் ஓட்டுநர் ஆனந்த் பேருந்தை எடுப்பதற்கு முன் பேருந்தின் முன்பக்க சக்கரம் கழற்றப்பட்டு மாற்றப்பட்டுள்ளது. இதில் பணிமனை ஊழியர்கள் இருவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மற்றொரு பேருந்தின் அவசர பணிக்காக சென்று விட்டனர்.அப்போது ஓட்டுநர் ஆனந்த் பேருந்து பணி முடிவடைந்து விட்டதா என ஊழியர்களிடம் கேட்காமல் பேருந்தை எடுத்துச் சென்றிருக்கிறார்.

ஊழியர்களும் கவன குறைவாக சக்கரத்தை கழற்றி மாற்றும் போது நட்டுகளை டைட் செய்யாமல் விட்டு விட்டு விட்டதும் தெரிய வந்தது.இதையடுத்து பணிமனை ஊழியர்கள் மற்றும் ஓட்டுநர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பி.ஆர்.டி.சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post திருநள்ளாறு அருகே ஓடும் பஸ்சில் கழன்று விழுந்த சக்கர நட்டுகள் appeared first on Dinakaran.

Tags : Tirunallaru ,Karaikal ,BRTC ,Thirunallaru ,
× RELATED லுங்கி, பனியன் அணிந்து மூட்டை தூக்கும் புதுவை மாஜி அமைச்சர்: வீடியோ வைரல்