×

கொளத்தூர் சோதனைச்சாவடி வழியாக கனிம வளங்கள், மரங்கள் கடத்தல் அதிகரிப்பு

*கிராம மக்கள் அதிர்ச்சி

மேட்டூர் : கொளத்தூர் வனத்துறை சோதனைச்சாவடி வழியாக கனிம வளங்கள், மரங்கள் கடத்தல் அதிகரித்துள்ளதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.தமிழக -கர்நாடக எல்லையில் உள்ள வனப்பகுதிகளில் மான், கடமான், காட்டுப்பன்றிகள் அதிகளவில் உள்ளன. கடந்த சில மாதங்களாக பெரியகுளம், குருவரெட்டியூர், கொளத்தூர், உள்ளூர் தண்டா உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறையினர் களப்பணிக்கு செல்வதில்லை என கூறப்படுகிறது. வனத்துறை கண்காணிப்பு இல்லாத காரணத்தால் வனவிலங்குகள் வேட்டை அதிகரித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமைக்கு முதல் நாளிலும், திருவிழா காலங்களிலும் வனவிலங்குகள் வேட்டை ஜரூராக நடைபெற்று வருவதாகவும், மான் கறியை கூறு போட்டு கேட்பவர்களுக்கு வீடு வீடாக சென்று விநியோகித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மேலும், கொளத்தூர் சோதனைச்சாவடி வழியாக, விலை உயர்ந்த தேக்கு மரம் கருங்காலி ஆகியவை கேரளத்துக்கு கடத்திச் செல்லப்படுகிறது. அதிகாலை நேரங்களில் விலை உயர்ந்த கருங்கற்கள் கடத்தப்படுகின்றன.

சோதனைச்சாவடிகளில் பணிபுரிபவர்கள் புதியவர்கள் என்பதாலும், அனுபவம் இல்லாதவர்கள் என்பதாலும் கள்ளத்தனமாக வனவிலங்குகளின் இறைச்சி, கனிமங்கள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. வன குற்றங்களை தடுக்க தகுதியான நபர்களை வனத்துறை சோதனைச்சாவடியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். இரவு நேரங்களில் துப்பாக்கியுடன் கூடிய கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கிராம வாசிகள் கூறுகின்றனர்.

The post கொளத்தூர் சோதனைச்சாவடி வழியாக கனிம வளங்கள், மரங்கள் கடத்தல் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Kolathur ,Mettur ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அருகே பரிதாபம்: மரத்தில் கார் மோதியதில் மகன், பெண் அதிகாரி பலி