×

தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்பதை நிரூபிக்க வேண்டும் மாணவர்களுக்கு கற்றல் சந்தேகம் விளக்க பாடம் வாரியாக ‘வாட்ஸ்ஆப்’ குழு

*தலைமையாசிரியர்களுக்கு நெல்லை புதிய சிஇஒ உத்தரவு

நெல்லை : பாடம் வாரியாக வாட்ஸ்ஆப் குழு உருவாக்கி மாணவர்களின் கற்றல் சந்தேகங்களை விளக்க வேண்டும். நடப்பு கல்வியாண்டில் தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்பதை நிரூபிக்க வேண்டும் என தலைமையாசிரியர்களுக்காக நடந்த ஆலோசனை கூட்டத்தில் நெல்லை மாவட்ட புதிய முதன்மைக்கல்வி அலுவலர் சின்னராசு கூறினார்.

நெல்லை மாவட்ட புதிய முதன்மைக் கல்வி அலுவலராக நேற்று முன்தினம் பொறுப்பேற்ற சின்னராசு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டத்தை நேற்று நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: நடப்பு புதிய கல்வியாண்டில் கற்பித்தல் தொடர்பான அறிவுரைகளை பின்பற்றி திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த கல்வியாண்டில் பொதுத்தேர்வுகளில் 96 சதவீத தேர்ச்சியுடன் மாநில ரேங்க் பட்டியலில் நெல்லை மாவட்டம் முன்னேற்றமடைந்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் நெல்லை எப்போதுமே தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்பதை நிரூபிக்கும் வகையில் முதலிடத்தை பிடிப்பதற்கான கல்வி பணிகளை மேற்கொள்ளவேண்டும். அதற்காக இப்போதிருந்தே கற்பித்தல் பணியை மேற்கொள்ள வேண்டும்.

10, 11, 12ம் வகுப்புகளுக்கு பாடம் வாரியாக வாட்ஸ்ஆப் குழுக்களை உருவாக்கி அதில் தலைமையாசிரியர் கண்காணிப்புடன் சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள், மாணவர்களை இணைக்க வேண்டும். அதன்மூலம் மாணவர்களின் கல்வி தொடர்பான சந்தேகங்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும். காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தி ஊக்குவிக்க வேண்டும்.

மெல்ல கற்கும் மாணவர்களை கண்டறிந்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மாநில அளவில் நடத்தப்படும் அனைத்து வகையான போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளில் மாணவர்களை பங்கேற்க செய்து அவர்களின் திறமைகளை வெளிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எமிஸ் அப்டேஷன் பணிகளை உடனுக்குடன் கவனமாக மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில் அனைத்து வகையான மன்ற செயல்பாடுகளில் மாணவர்களை பங்கேற்க செய்ய வேண்டும். மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கல்வித்துறை அவ்வப்போது தரும் ஆலோசனைகள், அறிவுரைகளை சரியாக பின்பற்றவேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட இடைநிலைக்கல்வி அலுவலர் பாலன், நேர்முக உதவியாளர் ஹரிராம், மற்றும் முதன்மைக்கல்வி அலுவலக, மாவட்ட கல்வி அலுவலக பணியாளர்கள், தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டனர்.

பாட புத்தகங்களை ஒப்படைக்காவிட்டால் நடவடிக்கை

நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அரசின் இலவச பாடபுத்தகங்களில் சில பள்ளிகளில் உபரியாகவும் சில பள்ளிகளில் பற்றாக்குறையாகவும் உள்ளன. 7 மற்றும் 8ம் வகுப்பு பாடபுத்தகங்கள் சில பள்ளிகளில் பற்றாக்குறையாக உள்ளன. இதுகுறித்து ஆலோசனை கூட்டத்தில் முதன்மைக்கல்வி அலுவலர் குறிப்பிடுகையில், தேவைக்கு அதிகமாக உள்ள பாடப் புத்தகங்களை உடனடியாக இன்றைக்குள் உரிய விபரங்களுடன் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் தலைமையாசிரியர்கள் ஒப்படைக்க வேண்டும். இல்லையேல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பாட புத்தகங்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் திங்கட்கிழமைக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

The post தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்பதை நிரூபிக்க வேண்டும் மாணவர்களுக்கு கற்றல் சந்தேகம் விளக்க பாடம் வாரியாக ‘வாட்ஸ்ஆப்’ குழு appeared first on Dinakaran.

Tags : Oxford of the South ,whatsapp ,Nellie ,
× RELATED நெட் இல்லாமல் வாட்ஸ்அப்பில் தகவல்...