*நோயால் அவதியா?; பொதுமக்கள் அச்சம்
அந்தியூர் : பர்கூர் மலைப்பகுதியில் மணியாச்சி பள்ளம் பகுதியில் கடந்த 3 நாட்களாக சுற்றித்திரியும் ஆண் யானையால் மலைப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே பர்கூர் மலையில் மணியாச்சி பள்ளம் உள்ளது. இங்குள்ள ரோட்டின் ஓரத்தில் ஒற்றை ஆண் யானை ஒன்று கடந்த 3 நாட்களாக ஒரே பகுதியில் நின்றும், சுற்றிக்கொண்டும் திரிகிறது.
இதனை மேற்கு மலைப்பகுதியில் உள்ள ஓசூர், கொங்காடை, தம்புரெட்டி, ஒந்தனை உள்ளிட்ட மலைக்கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து பர்கூர் வனத்துறையினருக்கு தகவல் அளித்து உள்ளனர். மேலும், வனத்துறையினர் ஒற்றை ஆண் யானையை கண்காணித்து வாகன ஓட்டிகளின் அச்சத்தை போக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில் ரோட்டின் ஓரத்திலேயே ஒற்றை ஆண் யானை நின்று கொண்டிருப்பது அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அல்லது பாதசாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை உருவாக்கியுள்ளது. மேலும், ஒரே இடத்தில் பல மணி நேரமாக யானை நின்று கொண்டிருப்பதால் அதற்கு நோய்வாய்ப்பட்டுள்ளதோ என்றும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக வன ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, பர்கூர் வனத்துறையினர் மற்றும் கால்நடை துறையினர் ஒற்றை ஆண் யானையை கண்காணித்தும், நோய்வாய்ப்பட்டு இருந்தால் சிகிச்சை அளிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்கு மலைப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post பர்கூர் மலைப்பகுதியில் மூன்றாவது நாளாக சுற்றித்திரியும் ஒற்றை யானை appeared first on Dinakaran.