×

டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் உறுதி முதலூரில் மக்கள் இன்று அறிவித்த மறியல் வாபஸ்

சாத்தான்குளம், ஜூலை 7: முதலூர் டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து இன்று நடக்கவிருந்த சாலைமறியல் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர். சாத்தான்குளம் அருகே முதலூரில் சுப்பராயபுரம் சாலையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை அருகில் குடியிருப்புகள், பேருந்து நிழற்குடை உள்ளதால் மது பிரியர்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. இதனால் கிராம மக்கள், இக்கடையை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

ஆனால் மாற்றம் செய்யப்படாமல் இருந்து வந்தது. இதையடுத்து கிராம மக்கள், இன்று (7ம் தேதி) டாஸ்மாக் மதுக்கடை அருகில் சாலை மறியல் செய்ய போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த மறியல் போராட்டம் தொடர்பான சமாதான பேச்சுவார்த்தை, சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் ரதிகலா தலைமை வகித்தார். இதில் அதிகாரிகள் தரப்பில் டாஸ்மாக் தூத்துக்குடி மண்டல மேலாளர், தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் பவுலோஸ், தூத்துக்குடி கோட்ட கலால் ஆய்வாளர், கிராம மக்கள் சார்பில் ஸ்டேன்லி ஞானப்பிரகாஷ், முதலூர் பஞ். முன்னாள் தலைவர் கிறிஸ்டோபர் ஜெயக்குமார், சாஸ்தாவிநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் லூர்துமணி, சாத்தான்குளம் அரிமா சங்க பட்டைய தலைவர் சுந்தர், கடாட்சபுரம் ஜெயசிங், ஞானமுத்து உள்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் முதலூரில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்றம் செய்வது எனவும், அதுவரை தொடர்ந்து கண்காணித்து பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதையேற்று கிராம மக்கள், சாலை மறியல் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்து விட்டு கலைந்து சென்றனர்.

The post டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் உறுதி முதலூரில் மக்கள் இன்று அறிவித்த மறியல் வாபஸ் appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Madalur ,Chatankulam ,Mudalur ,
× RELATED 1,000 டாஸ்மாக் கடைகளை அரசு மூட வேண்டும்:...