×

காஞ்சிபுரம் பேருந்து நிறுத்தத்தில் பார்க்கிங் இடமாக மாறிய நிழற்குடைகள்: பயணிகள் வேதனை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் காமராஜர் சாலையில் உள்ள இருபுறமும் உள்ள 2 பேருந்து நிறுத்த நிழற்குடைகளும் பார்க்கிங் இடமாக மாறியுள்ளது. இதனால், இருக்கைகளில் அமர முடியவில்லை என பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் காஞ்சிபுரம் எம்பி சிறுவேடல் செல்வம் ஏற்பாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கடந்த 2019-2020ம் ஆண்டு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நிழற்குடை அமைக்கப்பட்டது. இதில், காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளான செவிலிமேடு, ஓரிக்கை, களக்காட்டூர், வேடல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பயணிகள் இந்த நிழற்குடையில் ஓய்வெடுத்துவிட்டு சென்றனர். இந்நிலையில், அந்த நிழற்குடை முன்பு வாகன ஓட்டிகள் அதிகளவில் பைக்குகளை நிறுத்திவிட்டு செல்கின்றனர். மேலும், நிழற்குடைக்கு செல்லும் வழியை அடைத்து சிறுகடைகள் உள்ளதால் நிழற்குடையில் சென்று அமர முடியாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர். மேலும், தற்போது இருக்கைகளை சில சமூக விரோதிகள் சேதப்படுத்தி உள்ளனர். இதேபோன்று, எதிர்புறத்தில் போலீஸ் பூத் அருகில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடை பகுதியிலும் வரிசையாக டூ வீலர்களை நிறுத்துவதால் பயணிகள் நிழற்குடை உள்ள பகுதியில் நிற்கவோ, அமரவோ முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, பயணிகளின் நன்மை கருதி, நிழற்குடை பகுதிகளில் டூ வீலர்களை நிறுத்தாமல் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post காஞ்சிபுரம் பேருந்து நிறுத்தத்தில் பார்க்கிங் இடமாக மாறிய நிழற்குடைகள்: பயணிகள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Kamaraj Road ,Kanchipuram Bus Stand ,
× RELATED காஞ்சிபுரம் அருகே ஓரத்தூர் பகுதியில்...