×

ஒரகடம் ஆறு வழிச்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கனரக வாகனங்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பெரும்புதூர்: ஒரகடத்தில் ஆறு வழிச்சாலையை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரும்புதூர் பகுதியிலிருந்து – சிங்கப்பெருமாள் கோயில் வரை ஆறு வழிச்சாலை உள்ளது. இந்த சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான கார், பைக்குகள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில், சென்னை துறைமுகத்திலிருந்து ஒரகடம் பகுதியில் இயங்கும் தனியார் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யபடும் உதிரி பாகங்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்காக தினந்தோறும் நூற்றுக்கணக்கான கனரக லாரிகள் ஒரகடம் பகுதியை வந்தடைகிறது.

இவ்வாறு வரும் வாகனங்கள் செங்கல்பட்டு செல்லும் மார்க்கமாக நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு அணிவகுத்து நிறுத்தப்படுகிறது. இதன் காரணமாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும், அவ்வழியே அதிவேகத்தில் வரும் பைக், கார் போன்ற வாகனங்களும் விபத்தில் சிக்குவது தொடர்ந்து வருகிறது. தனியார் தொழிற்சாலைகளுக்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு என சிப்காட் சார்பில் கனரக வாகனங்கள் நிறுத்தம் முனையம் உள்ளது. அங்கு லாரிகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதால், அதனை தவிர்க்க ஓட்டுனர்கள் அலட்சியமாக சாலைகளில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால், விபத்துக்கள் நடந்து உயிரிழப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து இடையூறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்களை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

The post ஒரகடம் ஆறு வழிச்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கனரக வாகனங்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Oragadam six-lane highway ,Perumputhur ,Oragadam ,Dinakaran ,
× RELATED தைவான் நாட்டை சேர்ந்தவர் மர்ம சாவு