×

புரோ லீக் ஹாக்கி இரட்டைச் சாம்பியன் நெதர்லாந்து: 4வது இடத்தில் இந்தியா

ஆன்ட்வெர்ப்: புரோ லீக் ஹாக்கி போட்டியின் ஆடவர், மகளிர் என 2 பிரிவுகளிலும் நெதர்லாந்து அணிகள் முதல் இடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றன. சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு(எப்ஐஎச்) சார்பில் நடத்தப்படும் புரோ லீக் ஹாக்கிப் போட்டியின் 4வது தொடர் நேற்றுடன் முடிந்தது. தரவரிசையில் முதல் 9 இடங்களில் உள்ள ஆடவர், மகளிர் அணிகள் இந்த தொடரில் பங்கேற்றன. ஆடவர் பிரிவில் இந்தியா, பெல்ஜியம், நெதர்லாந்து, பிரிட்டன், ஸ்பெயின், ஜெர்மனி, அர்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் களம் கண்டன. மகளிர் பிரிவில் ஆஸ்திரேலியா, பெல்ஜியம், அர்ஜென்டீனா, நெதர்லாந்து, ஜெர்மனி, பிரிட்டன், சீனா, நியூசிலாந்து, அமெரிக்க ஒன்றியம் ஆகிய நாடுகள் மோதின.

ரவுண்டு ராபின் முறையில் ஒவ்வொரு அணியும் தலா 16 ஆட்டங்களில் விளையாடின. ஆடவர் பிரிவில் நடப்பு சாம்பியன் நெதர்லாந்து 16 ஆட்டங்களில் விளையாடி 10 வெற்றி, 4டிரா, 2 தோல்வி மூலம் 35 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்ததுடன் தொடர்ந்து 2வது முறையாக கோப்பையை தக்க வைத்தது. கிரேட் பிரிட்டன் 32 புள்ளிகளுடன் 2வது இடத்தையும், ஒலிம்பிக் சாம்பியன் பெல்ஜியம் 30 புள்ளிகளுடன் 3வது இடத்தை உறுதி செய்தன. அதே 30 புள்ளிகளை பெற்ற இந்தியா 8 வெற்றி, 3டிரா, 5தோல்விகளுடன் 2முறையாக 4வது இடத்தை பிடித்தது. கடந்த முறை 3வது இடத்தில் இருந்தது.

முதல் புரோ லீக் தொடரில் இந்தியா பங்கேற்கவில்லை. புரோ லீக் 4வது தொடரின் மகளிர் பிரிவிலும் நெதர்லாந்து அணியே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அந்த அணி16 ஆட்டங்களில் விளையாடி 15 வெற்றி, 1 டிராவுடன் தோல்வியையே சந்திக்காமல் 47 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தது. மேலும் 3வது முறையாக கோப்பையை வசப்படுத்திய சாதனையையும் படைத்துள்ளது. அர்ஜென்டீனா 32 புள்ளிகளுடன் 2வது இடத்தையும், ஆஸ்திரேலியா 31புள்ளிகளுடன் 3வது இடத்தையும், ஜெர்மனி 29 புள்ளிகளுடன் 4வது இடத்தையும் பிடித்தன.

The post புரோ லீக் ஹாக்கி இரட்டைச் சாம்பியன் நெதர்லாந்து: 4வது இடத்தில் இந்தியா appeared first on Dinakaran.

Tags : Pro League Hockey Double ,Netherlands ,India ,Antwerp ,Pro League ,Dinakaran ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...