×

செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடிக்கு சரமாரி வெட்டு: 5 பேர் கும்பலுக்கு வலை

செங்கல்பட்டு: தாம்பரம் இரும்புலியூர் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் (32). இவர் மீது தாம்பரம், ஓட்டேரி ஆகிய பகுதிகளில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், ஒரு வழக்கு விசாரணைக்காக நேற்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராக அவர் வந்தார். அப்போது, நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே வந்த லோகேஷை, பைக்கில் வந்த 5 பேர் சுற்றி வளைத்து, வெட்ட முயன்றுள்ளனர். சுதாரித்துக்கொண்ட லோகேஷ், நீதிமன்றத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு தலைதெறிக்க ஓடியுள்ளார். அவரை விடாமல் பின்தொடர்ந்து துரத்திய கும்பல், நாட்டு வெடிகுண்டுகளை லோகேஷ் மீது வீசியது. இதில், அவர் கீழே விழுந்துள்ளார். பின்னர், அந்த கும்பல் லோகேஷை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியது.

ரத்த வெள்ளத்தில் சரிந்த லோகேஷை உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத் விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவத்தால் நீதிமன்றம் அருகே போலீசார் குவிக்கப்பட்டனர். பட்டப்பகலில் போலீசார், வழக்கறிஞர்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த நீதிமன்றத்தில் நடந்த இந்த சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:கடந்த 2015ம் ஆண்டு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான பாலாஜிக்கும், லோகேஷின் அண்ணனான பாஸ்கர் என்பவருக்கும் கிரிக்கெட் விளையாடியபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பாஸ்கர், லோகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் பீர்க்கன்காரணை பகுதியில் வைத்து பாலாஜியை கொலை செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த பாலாஜியின் நண்பரான விவேக், கடந்த 2017ம் ஆண்டில் லோகேஷின் அண்ணனான பாஸ்கரை கொலை செய்துள்ளார். இதனையடுத்து லோகேஷ் மற்றும் விவேக் ஆகிய இருவருக்கும் இடையில் பகை முற்றியது. தொடர்ந்து விவேக்கை தீர்த்துக்கட்ட லோகேஷ் பல முயற்சிகளை மேற்கொண்டார். மறுபுறம் லோகேஷையும் கொலை செய்ய விவேக் திட்டம் தீட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் செங்கல்பட்டு கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வரும் கொலை வழக்கில் ஆஜராக லோகேஷ் வந்துள்ளார். அவரை, மீண்டும் மதியம் 2 மணிக்கு ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனால் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த லோகேஷை பின் தொடர்ந்து வந்த 5 பேர், கொலை செய்யும் நோக்கில் நாட்டுவெடி குண்டு வீசியதுடன் சரமாரியாக வெட்டியுள்ளது.பொதுமக்களை அச்சுறுத்துவதற்காக ஒரு நாட்டு வெடிகுண்டும், லோகேஷ் மீது ஒரு நாட்டு வெடிகுண்டுமாக 2 வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன. முதற்கட்ட விசாரணையில், கடந்த 2015ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட பாலாஜியின் நண்பர் விவேக்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. தனிப்படைகள் அமைத்து அவர்களை தேடி வருகிறோம். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

* டிஐஜி நேரில் ஆய்வு

கொலை முயற்சி நடந்த இடத்தில் காஞ்சிபுரம் சரக டிஐஜி பகலவன், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்பிரணீத் ஆகியோர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு குற்றவாளிகளின் தடயங்களை சேகரித்து வருகின்றனர். காஞ்சிபுரத்தில் இருந்து டைகர் என்ற மோப்பநாய் இந்த வழக்கு விசாரணைக்காக வரவழைக்கப்பட்டது. அது, சிறிது தூரம் ஓடி நின்றது.

 

The post செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடிக்கு சரமாரி வெட்டு: 5 பேர் கும்பலுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Sengalpattu court ,Chengalpattu ,Lokesh ,Irulyur ,Tambaram ,Tambaram, Otteri ,Chengalpattu court ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் அஞ்சல்துறை...