×

பரந்தூர் விமான நிலையம் அமையவுள்ள இடத்தில் ஐஐடி நிபுணர் குழு கள ஆய்வு: தமிழ்நாடு அரசு சார்பில் நடந்தது

காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையம் அமையவுள்ள இடத்தில் தமிழ்நாடு அரசு சார்பில், ஐஐடி நிபுணர் குழுவினர் நேற்று பரந்தூர், வளத்தூர், நெல்வாய், உள்ளிட்ட இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர். சென்னையில் 2வது விமான நிலையத்திற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு மற்றும் அதை ஒட்டியுள்ள மொத்தம் 13 கிராமங்களில் இருந்து சுமார் 4,781க்கும் அதிகமான ஏக்கர் பரப்பிலான நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த திட்டத்திற்கான மதிப்பு சுமார் ரூ.20 ஆயிரம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இதில், சுமார் 3 ஆயிரம் ஏக்கர் அளவிற்கு, பட்டா நிலங்களாகவும், மீதமுள்ள நிலங்கள் அரசு நிலமாகவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு ஆகிய கிராமங்களில் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிலையம் அமைய உள்ள பகுதியில், ஏரி, குளம், கால்வாய் என ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மக்களின் தொடர் போராட்டத்தை அடுத்து, தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் முன்னிலையில் போராட்ட குழுவினர் மற்றும் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் பேச்சு வார்த்தையின்போது, அரசு தரப்பில் ஐஐடி நிபுணர் குழுவினர் ஆய்வு செய்யப்படும் என உத்தரவிட்டனர்.

அதன்படி பேராசிரியர் மச்சேந்திரநாதன் தலைமையில், ஐஐடி குழுவினர் 15க்கும் மேற்பட்டோர் 13 கிராம பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் நேற்று ஐஐடி குழுவினர் 7க்கும் மேற்பட்ட இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர். ஐஐடி குழுவினர் பரந்தூர் கொளத்தூர் நெல்வாய்க்கு பெயர், பட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர், டிட்கோ மேலாண்மை இயக்குனர் ஜெய, நில நிர்வாக ஆணையர் நாகராஜன், டிட்கோ செயல் இயக்குனர் ஜெயச்சந்திர பானு, பொது மேலாளர் புவனேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது, ஏகனாம்புரம் கிராம மக்கள் எங்கள் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளக் கூடாது என உண்ணாவிரதம் மற்றும் பேரணி ஆகிய போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து சில இடங்களில் ஆய்வு மேற்கொள்ளாமலேயே அந்த குழு பாதியில் திரும்பியது.

The post பரந்தூர் விமான நிலையம் அமையவுள்ள இடத்தில் ஐஐடி நிபுணர் குழு கள ஆய்வு: தமிழ்நாடு அரசு சார்பில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : IIT ,Paranthur airport ,Tamil Nadu Govt. Kanchipuram ,Tamil Nadu government ,Paranthur, ,Valathur ,Dinakaran ,
× RELATED வங்காள விரிகுடா, பெருங்கடல்கள்...