×

1996 லஜ்பத் நகர் குண்டுவெடிப்பு 4 குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: டெல்லியில் கடந்த 1996ம் ஆண்டு நடந்த லஜ்பத் நகர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. டெல்லியில் உள்ள லஜ்பத் நகர் மார்க்கெட்டில் கடந்த 1996ம் ஆண்டு மே 21ம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் பலியாகினர். 40 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் முகமது நவுஷாத், மிர்சா நிசார் உசேன், முகமது அலி பட் ஆகியோருக்கு கீழ்நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு மரண தண்டனையும், ஜாவேத் அகமது கானுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கில், மரண தண்டனையை ஆயுளாக குறைந்த டெல்லி உயர் நீதிமன்றம், மிர்சா நிசார் உசேன் மற்றும் முகமது அலி பட் ஆகியோரை விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தது. இதை தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், விக்ரம் நாத் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் நேற்று அளித்த 196 பக்க தீர்ப்பில் கூறியிருப்பதாவது: அப்பாவி மக்களின் மரணத்திற்கு காரணமான குற்றத்தின் தீவிரம் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் பங்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, குற்றவாளிகள் 4 பேருக்கும் எந்த நிவாரணமும் இன்றி, சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.

தேச பாதுகாப்பு சம்மந்தப்பட்ட இதுபோன்ற வழக்குகளை விரைவாக விசாரிக்க வேண்டியது காலத்தின் தேவை. ஆனால் 27 ஆண்டுக்கு மேல் வழக்கு தாமதமாக நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. விசாரணை நீதிமன்றத்தில் 13 ஆண்டுக்குப் பிறகுதான் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உரிய கவனத்துடன் இந்த விவகாரம் கையாளப்படவில்லை என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அதே சமயம் செல்வாக்குமிக்க நபர்கள் குறுக்கீடு காரணமாக விசாரணை தாமதப்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதையும் நாங்கள் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். இந்த தாமதம் தான் குற்றவாளிகள் மரண தண்டனை விதிக்கப்படுவதில் இருந்து தப்பிக்க வைத்துள்ளது. எனவே, விடுதலை செய்யப்பட்ட 2 குற்றவாளிகள் உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

The post 1996 லஜ்பத் நகர் குண்டுவெடிப்பு 4 குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : 1996 Lajpat Nagar ,Supreme Court ,New Delhi ,Lajpat Nagar ,Delhi ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு