×

தேனி மகனுக்கு அடுத்து பதவி பயத்தில் இருக்கும் சேலம் விஐபி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கோர்ட்டில் தேனிக்காரர் மகனின் பதவி காலியாச்சு.. அந்த சந்ேதாஷத்தை ஏன் அனுபவிக்க முடியாமல் சேலம்காரர் தவிக்கிறார் என்று கேட்டார்…’’ பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சியின் தலைவரான சேலம்காரருக்கு, தேனிக்காரரின் மகன் வழக்கில் தீர்ப்பு எதிராக வந்த சில மணி நேரம் மட்டுமே சந்ேதாஷப்பட்டாராம். அதற்கு பிறகு அந்த மகிழ்ச்சி கொஞ்ச நேரத்திலேயே காணாம போயிடுச்சாம். கட்சிக்கு துரோகம் செஞ்சால் இப்படித்தான் நடக்கும் என தன்னை சுற்றி இருந்த ஆதரவாளர்களிடம் சிலாகித்து பேசி சந்தோஷப்பட்டாராம். சற்று நேரத்திலேயே அவரது முகம் மீண்டும் சுருங்கிப் போய், சோக ரேகை ஒட்டிக்கிச்சாம். வருத்தம் அடைய என்ன காரணம் என்று விசாரித்தபோது புது தகவல் வெளியாகி இருக்காம்.

அதாவது, சேலம்காரர் மீது வழக்கு போட்டிருப்பவரும், தேனிக்காரரின் சன் மீது வழக்கு போட்டவரும் ஒரே ஆள் தானாம். சேலத்துக்காரர் மீது மாங்கனி கோர்ட்டிலேயே வழக்கை தாக்கல் செஞ்ச நேரத்தில் சேலத்துக்காரரின் மீது எப்.ஐ.ஆரும் பதிவாகி இருக்காம். குறிப்பாக, சொத்து விவரங்களை மறைத்ததும், தேர்தலில் போட்டியிட்ட இலை சின்னத்திற்கான விண்ணப்பத்தில் கையெழுத்து போட்டதும் தான் சேலம்காரருக்கு இப்போது சிக்கலை ஏற்படுத்தியிருக்காம். அதில் பொதுச்செயலாளர் தான் கையெழுத்தை போடணுமாம். இது தேர்தல் விதியை மீறிய செயலுன்னு வழக்கில் சொல்லப்பட்டிருக்காம். இதனால கடும் ஷாக்கான தலைவரு வழக்குக்கு தடைகேட்டு மேல் கோர்ட்டுல மனுதாக்கல் செஞ்சிருக்காரு.

அந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்காம். இதுபோன்ற தேர்தல் வழக்குகள் என்கொயரிக்கு வந்தா ரெண்டு மாசத்துல முடிக்கணுமாம் என்று சட்டம் சொல்லுதாம். இதனாலத்தான் சேலத்துக்காரருக்கு மகிழ்ச்சி ரொம்ப நேரம் நீடிக்கலையாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘விழும் அப்புறம் புரம் என்று முடியும் மாவட்டத்துல தாமரை தடுமாறுதாமே, அப்படியா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தாமரைக் கட்சியில் புரம் என்று முடியும் மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு இடையே யார் பெரியவர் என்ற போட்டி பேனர் வைப்பதில் துவங்கி மேடையில் இடம் போடுவது வரை பிரச்னை தொடர்கதையாக இருக்காம்.

மேலும் கட்சி பெண் நிர்வாகியிடம் சர்ச்சை பேச்சும் ஓய்ந்தபாடில்லை. மாவட்டத்தின் தலைவராக உள்ள கலியமானவர்தான் அவ்வப்போது செல்போனில் பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறாராம். அண்மையில் பெண் நிர்வாகியிடம் ஆபாசமாக பேசி சமூக வலைதளங்களில் இந்த ஆடியோக்கள் வைரலாகியதாம். இது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சி மேலிடத்திலும் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்க சென்றாராம். அப்போது கலியமானவர் ஆட்கள், அந்த பெண்ணை மேடையில் இருந்து தள்ளிவிட்டார்களாம். இது தொடர்பாக அந்த பெண், எஸ்பி ஆபீசில் புகார் கொடுத்தது விசாரணை நிலுவையில் கிடக்கிறதாம். மேலிடத்தில் செல்வாக்கு இருப்பதால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என கலியமானவர் அடித்து சொல்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வெயிலூர் கோட்டையில் அரசன் இல்லையென்றாலும் பிரச்னை ஓடிட்டு இருக்கு போல…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் கோட்டைக்குள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துல பல பணிகள் நடக்குது. அதுல சுற்றுலா பயணிகள், கோட்டைக்கு வரும் மக்கள் சாப்பிட ஒரு கேன்டீன் ஒண்ணு கட்டியிருக்காங்க. அந்த கேன்டீனை மகளிர் குழுக்களுக்கோ, மாற்றுத்திறனாளிகளுக்கோ, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கோ ஒதுக்கி கொடுக்கணும்னு இப்போது கோரிக்கை எழுந்திருக்காம். ஆனால், ஏற்கனவே ஓட்டல் தொழிலில் இருப்பவர்கள் அந்த கேன்டீனை கைப்பற்ற காய் நகர்த்தி வர்றாங்களாம்.

அதனால, ஏற்கனவே வெயிலூர் ஒன்றிய அலுவலகத்துலயும், மாவட்ட ஊராட்சி அலுவலகத்திலயும் மகளிர் குழுக்கள் கேன்டீன்களை நல்லா நடத்திட்டு வர்றாங்க. அதுபோல வெயிலூர் கோட்டைக்குள் உள்ள கேன்டீனையும் மகளிர் குழு, மாற்றுத்திறனாளிகள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஒதுக்கி தரணும்னு மக்கள் பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மலைக்கோட்டையில் தேனிக்காரரின் ஆதரவாளருக்கு செக் வைக்க நினைக்கும் சேலம்காரரின் வியூகம் பற்றி சொல்லுங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ இலை கட்சியில் சேலம்காரர் கை ஓங்கியதால் தேனிக்காரர், குக்கர் தலைமையுடன் கை கோர்த்தார்.

மலைக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சேலம்காரர் அணியில் உள்ள 2 வது கட்ட நிர்வாகிகளை இழுக்க முடிவு செய்த தேனிக்காரர், குக்கர் தலைமையும் ‘வைட்டமின் ப’ இறக்கி அதற்கான திரைமறைவான வேலையில் இறங்கியுள்ளனர். இந்த தகவல் தெரிய வந்த சேலம்காரர் உச்சகட்ட கோபத்தில் இருக்காராம். மலைக்கோட்டை மாவட்டத்தில் சேலம்காரர் அணி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. மாலையில் நடந்த நிகழ்ச்சிக்காக காலையிலேயே சேலம் விஐபி மலைக்கோட்டைக்கு வந்து விட்டாராம். தொடர்ந்து, தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினாராம். இதில், சில முக்கிய ஆலோசனைகளை ஆதரவாளர்களுக்கு வழங்கியுள்ளார்.

அதில், நமது அணியில் இருந்து யாரும் தேனிக்காரர் அணிக்கு தாவ கூடாது. இந்த மாதத்திற்குள் மலைக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தேனிக்காரரின் முக்கிய நிர்வாகிகள், அவர் மீது இருக்கும் அதிருப்தி நிர்வாகிகளை நமது அணிக்கு கொண்டு வர வேண்டும் என மாஸ்டர் பிளான் போட்டு கொடுத்துள்ளார். இதற்காக அனைத்து முயற்சிகளையும் நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும். இதற்கான ‘வைட்டமின் ப’ எவ்வளவு வாரி இறைத்தாலும் அதுபற்றி கவலை இல்லை என சேலம்காரர் கறாராக சொல்லிட்டாராம். இதனால் விரைவில் மலைக்கோட்டையில் தேனிக்காரர் அணியில் முக்கிய நிர்வாகிகள் சேலம்காரர் அணி பக்கம் தாவ வாய்ப்பு அதிகரித்துள்ளதாக பேசிக்கறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.

The post தேனி மகனுக்கு அடுத்து பதவி பயத்தில் இருக்கும் சேலம் விஐபி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Salem ,Theni ,Yananda ,Thenikar ,Salemkar ,Peter ,
× RELATED தேர்தலில் அதிமுக பின்னடைவு எடப்பாடி...