×

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட வாலிபர் கைது

தண்டையார்பேட்டை: அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட வாலிபரை தண்டையார்பேட்டை போலீசார் கைது செய்தனர். தண்டையார்பேட்டை வினோபா நகரைச் சேர்ந்தவர் ராசாத்தி (34). இவர் ராயபுரத்தில் உள்ள தனியார் அச்சகத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் உடன் வேலை பார்க்கும் பெண் மூலம், கொருக்குப்பேட்டை காரநேசன் நகரைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி (34) என்பவர் ராசாத்திக்கு அறிமுகமானார். தனக்கு அரசு அதிகாரிகளைத் தெரியும், எனவே உங்களுக்கு தலைமைச் செயலகத்தில் துப்புரவு வேலை வாங்கி தருகிறேன் என்று ராசாத்தியிடம் அவர் கூறியுள்ளார். இதற்காக கடந்த ஏப்ரல் மாதம் தண்டையார்பேட்டை மாநகராட்சி அலுவலகம் அருகே ரூ.9,500 பணத்தை ராசாத்தியிடம் இருந்து தட்சிணாமூர்த்தி வாங்கியுள்ளார்.

பின்னர் பணத்தை வாங்கிக்கொண்டு வேலை வாங்கித் தராமல் அவர் ஏமாற்றி வந்துள்ளார். போன் செய்தாலும் போனை எடுக்காமல் அவர் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே 4 பேரிடம் தூய்மைப் பணியாளர் வேலை வாங்கித் தருவதாக ரூ.40 ஆயிரத்தை தட்சிணாமூர்த்தி வாங்குவது குறித்த தகவல் ராசாத்திக்கு தெரிய வந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்று அவரை ராசாத்தி மடக்கி பிடித்துள்ளார். இதுகுறித்து தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தட்சிணாமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Vinoba Nagar ,Dinakaran ,
× RELATED இசிஆரில் பிறந்தநாளை கொண்டாட போதை...