×

ராகுல்காந்தி எம்.பி பதவிநீக்கம் போல ரவீந்திரநாத்தும் பதவி நீக்கப்படுவாரா?ஒன்றிய அரசுக்கு முத்தரசன் காட்டமான கேள்வி

பரமக்குடி: ரவீந்திரநாத் எம்பி பதவியை ஒன்றிய அரசு தகுதி நீக்கம் செய்யுமா என முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று அளித்த பேட்டி: பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உள்ளிட்ட வாக்குறுதிகள் கூடிய விரைவில் நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அதற்கு மாறாக விலைவாசி உயர்வு பல் மடங்கு அதிகரித்துள்ளது.

நாட்டில் மக்களை பிளவுப்படுத்தி தங்கள் அரசியல் நோக்கத்திற்காக ஆதாயம் தேடி வருகிறது. ஒன்றிய அரசு அறிவித்துள்ள பொது சிவில் சட்டம் மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத ஒன்று. ரயில் பெட்டிகளில் பொது மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளை குறைத்து விட்டு ஏசி பெட்டிகளை அதிகப்படுத்துவது என்ற முடிவு சாதாரண மற்றும் நடுத்தர மக்களை மிகவும் பாதிப்பு அடையச் செய்யும். ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என தெரிவிக்கும் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, ஆளுநரை திரும்ப பெறக்கோரி ஒன்றிய அரசிடம் பேச வேண்டும்.

அதிமுக ஆளும்போது நடைபெற்ற ஊழலுக்கு எதிராக வழக்கு தொடுப்பதற்கு ஆளுநரிடம் அனுமதி கேட்டபோது அனுமதி அளிக்காமல் தற்போது, முறையாக அனுமதி கோரவில்லை என தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 30 நாள் அவகாசம் நீதிமன்றம் அளித்த நிலையில், உடனடியாக பதவி நீக்கம் செய்த ஒன்றிய அரசு, தற்போது ரவீந்திரநாத் எம்பி பதவியை நீக்கம் செய்யுமா? வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜ படுதோல்வியை சந்திக்கும். இவ்வாறு கூறினார்.

The post ராகுல்காந்தி எம்.பி பதவிநீக்கம் போல ரவீந்திரநாத்தும் பதவி நீக்கப்படுவாரா?ஒன்றிய அரசுக்கு முத்தரசன் காட்டமான கேள்வி appeared first on Dinakaran.

Tags : Rakulkandi M. Will Ravindra Natham ,Mutharasan ,Union Government ,Paramakudi ,Rabindranath ,Ramanathapuram District ,Dinakaran ,
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி மக்களை...