×

ஒன்றிய அரசை எதிர்ப்பவர்களை சிபிஐ, அமலாக்கத் துறை மூலம் பாஜ மிரட்டி வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் சாடல்

சென்னை: ஒன்றிய அரசை எதிர்ப்பவர்களை சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை மூலம் ஒன்றிய பாஜ அரசு மிரட்டி வருகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்ற இ.எஸ்.ஐ மருத்துவமனை இயக்குநர் ராஜமூர்த்தி இல்லத் திருமண விழாவில் பங்கேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பொது நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்துகொள்ளுகிற காரணத்தால், பெரும்பாலும் குடும்பத்தாரோடு அதிக நேரம் எங்களைப் போன்றவர்கள் செலவு செய்ய முடியாது. இது எல்லோர் குடும்பத்திலும், குறிப்பாக திமுகவினர் குடும்பத்தில் இருக்கும். என்னுடைய குடும்பத்துக்கும் நிச்சயம் இருக்கும். ஆனால் இந்தத் திருமணத்தின் மூலமாக ஓரளவிற்கு அந்த ஆதங்கம் குறைந்திருக்கும் என நான் கருதுகிறேன்.

எனவே என்னைப் பொறுத்தவரையில் இதுவும் ஒரு திமுக குடும்பம் என்று அந்த நிலையில்தான் இந்த மணவிழாவில் பங்கேற்று, தலைமையேற்று, மணவிழாவை நடத்தி வைத்து உங்கள் சார்பில் மணமக்களை நானும் வாழ்த்துவதற்கு கடமைப்பட்டிருக்கிறேன். இன்றைக்கு நாடு போய்க்கொண்டிருக்கும் நிலைகள் எல்லாம் உங்களுக்குத் தெரியும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஒரு நல்லாட்சி உருவாக்கித் தருவதற்கு நீங்கள் எந்த அளவிற்குத் துணை நின்றீர்களோ, அந்த ஆட்சி – ஒரு ‘திராவிட மாடல்’ ஆட்சியாக இன்றைக்கு எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறதோ, தேர்தல் நேரத்தில் வழங்கிய உறுதிமொழிகளை – வாக்குறுதிகளை எல்லாம் எந்த அளவிற்குத் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறதோ, அதுபோல் இந்திய நாட்டிற்கு ஒரு ஆட்சி தேவை.

காரணம், இன்றைக்கு ஒன்றியத்தில் இருக்கும் ஆட்சி – பாஜ ஆட்சி. அந்த பாஜ ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்திலிருந்து இன்று வரையில் தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களையும் நிறைவேற்ற முன்வரவில்லை; அதற்கு நேர்மாறாக மக்கள் விரோத போக்கோடு மதத்தை, சனாதனத்தை இன்றைக்கு மக்களிடத்தில் திணித்து, ஒரு சர்வாதிகார ஆட்சியை அவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நாட்டில் ஏற்கனவே சிவில் சட்டம், கிரிமினல் சட்டம் என்ற சட்டங்கள் இருக்கிறது. அதை நீக்கிவிட்டு பொது சிவில் சட்டமாக கொண்டு, வந்து பாஜ கட்சியின் கொள்கைகளை, அந்த ஆட்சியை எதிர்க்கக் கூடியவர்களை எல்லாம் பழிவாங்க வேண்டும் என்கிற நோக்கத்தில், மக்களுக்குத் துன்பங்களை, கொடுமைகளைக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்ற அந்தத் தீய சக்தியோடு இன்றைக்கு அவர்கள் செய்து கொண்டிருக்கும் இந்த காரியங்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஏற்கனவே அரசியல்வாதிகளை, அவர்களை எதிர்க்கக் கூடியவர்களை எல்லாம் சிபிஐ, ஐடி, அமலாக்க துறைகளை எல்லாம் வைத்து மிரட்டி கொண்டிருக்கும் ஒரு ஆட்சி இன்றைக்கு ஒன்றிய ஆட்சியாக நடந்து கொண்டிருக்கிறது. இது குடும்பக் கட்சியாக, எங்கள் குடும்பத்தில் நடைபெறும் திருமணமாக நடக்கிறது என்றெல்லாம் பெருமையோடு பேசினர். இதை கேட்டால், இன்றைக்கு ஒன்றியத்தில் இருக்கும் பிரதமருக்கு கோபம்கூட வந்துவிடும். ஏனென்றால் மத்திய பிரதேசத்தில் சென்று, நம்முடைய பிரதமர் என்ன பேசியிருக்கிறார் என்றால்; மத்திய பிரதேசம் சென்றுகூட அவருக்கு தி.மு.க.வின் நினைவுதான் வந்திருக்கிறது.

குடும்பத்தின் வளர்ச்சிக்காக ஆட்சியில் இருக்கிறார்கள், கட்சி நடத்துகிறார்கள் என்று விமர்சனம் செய்து பேசி இருக்கிறார். நான் அடுத்த நாளே, இதே மண்டபத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறபோது, நான் குறிப்பிட்டுச் சொன்னேன். இது குடும்பக் கட்சிதான். அண்ணாவால் உருவாக்கப்பட்ட – கலைஞரால் வளர்க்கப்பட்ட திமுக என்பது குடும்பக் கட்சிதான். இன்னும் சொல்ல போனால், தமிழ்நாடே தி.மு.க.வின் கட்சிதான். தமிழ்நாடே கலைஞருடைய குடும்பம்தான் என்று அன்றைக்கே நான் அழுத்தம் திருத்தமாக சொன்னேன். எனவே அப்படிப்பட்ட குடும்பத்தில் இன்றைக்கு நடைபெறும் இந்தத் திருமண நிகழ்ச்சியில் உங்களோடு சேர்ந்து நானும் மணமக்களை வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார். பாஜ ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து இன்று வரையில் தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற முன்வரவில்லை.

The post ஒன்றிய அரசை எதிர்ப்பவர்களை சிபிஐ, அமலாக்கத் துறை மூலம் பாஜ மிரட்டி வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் சாடல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Union government ,CBI ,Chief Minister ,M.K.Stalin Chatal ,Chennai ,Union BJP government ,Enforcement Department ,Income Tax Department ,
× RELATED பாஜக ஒன்றிய அரசு அரசியல் ஆதாயம் தேடும்...