×

ரேஷன் கடையில் தக்காளி விற்பனை பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

சென்னை: ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்வது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் கூறினார். இதுகுறித்து, தலைமை செயலகத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்வதில் எந்த பிரச்னையும் இல்லாமல், பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ளவர்கள் தொலைபேசியில், தமிழ்நாடு முதல்வர் எடுத்த நடவடிக்கையை பாராட்டுகிறார்கள்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் தக்காளி தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் உள்ளது. அந்த மாநில முதல்வர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், தமிழக மக்களுக்கு குறைந்த விலையில் தக்காளி கிடைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையால் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக முதல்வரை வெளிமாநிலத்தில் உள்ள தமிழர்கள் பாராட்டுகிறார்கள். தமிழக அரசு அறிவித்த 82 ரேஷன் கடைகளில் தக்காளி தற்போது விற்பனை நடந்து வருகிறது.

ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கு விற்கப்படுகிறது. தனியார் கடைகளில் ரூ.100க்கும் மேல் விற்கப்படுகிறது. இதனால் கூடுதலான ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன், கூட்டுறவு சந்தை கைப்பேசி செயலியை (COOP BAZAAR) துவக்கி வைத்தார். அதன்படி திருச்செங்கோடு, ஈரோடு, பெருந்துறை, சைதாப்பேட்டை, திருவல்லிக்கேணி, காஞ்சிபுரம் என 6 கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் மளிகை பொருட்கள், மரச்செக்கு எண்ணெய், தேன், சோப்பு வகைகள் என 44 வகையான தயாரிப்புகளை இந்த செயலி மூலம் பொதுமக்கள் பெற முடியும்.

The post ரேஷன் கடையில் தக்காளி விற்பனை பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது: அமைச்சர் பெரியகருப்பன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Periyakaruppan ,Chennai ,Periyagaruppan ,
× RELATED கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்தப்படும்: பெரியகருப்பன்