×

செங்குன்றம், உறையூர் சார்பதிவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் தகவல்

சென்னை: செங்குன்றம் மற்றும் உறையூர் சார்பதிவாளர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்ட அறிக்கை: வருமான வரி சட்டம் பிரிவு 285பிஏ மற்றும் விதி 114இ-ன்படி ஒவ்வொரு நிதி ஆண்டு முடிவடைந்ததும் ரூ.30 லட்சத்துக்கு மேற்பட்ட விற்பனை ஆவணங்களை பொறுத்து விற்பவர், வாங்குபவர், ஆதார் எண், தொலைபேசி எண், சொத்தின் தன்மை, சொத்தின் மதிப்பு போன்ற விவரங்கள் பதிவு அலுவலர்களால் வருமான வரித்துறை இணைய தளத்தில் மேலேற்றம் செய்யப்படுகிறது.

இது படிவம் 61ஏ என அழைக்கப்படுகிறது. சார்பதிவாளரால் இந்த விவரங்கள் அனுப்ப வேண்டும் என பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை மூலம் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூலை 4ம் தேதி திருச்சி பதிவு மாவட்டம் உறையூர் சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் திருவள்ளூர் பதிவு மாவட்டம் செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றிற்கு வருமான வரித்துறையினர் நேரில் வந்தனர். 2017-2018ம் நிதி ஆண்டிலிருந்து பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் விவரங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

தேவையான தகவல்களை நேரில் சரிபார்க்கவும் அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. இவ்விரு அலுவலகங்கள் குறித்தும் கூடுதல் விவரங்கள் வருமான வரித்துறையினரால் அந்தந்த சார்பதிவாளர்களிடம் கோரப்பட்டுள்ளது. இவ்விவரங்கள் விரைவில் வருமான வரித்துறைக்கு அனுப்பப்படும். மேலும் உரிய காலத்திற்குள் இவ்விவரங்களை மேலேற்றம் செய்யாத இவ்விரு அலுவலகங்களின் சார்பதிவாளர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து சார்பதிவாளர்களும் 61ஏ விவரங்களை வருமான வரித்துறையின் இணைய தளத்தில் உரிய காலத்திற்குள் மேலேற்றம் செய்ய வேண்டுமென கண்டிப்பான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

The post செங்குன்றம், உறையூர் சார்பதிவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Senggunram ,Varayur ,Tamil Nadu ,Chennai ,Department ,Dinesh Ponraj ,Sengunram ,Vrayyur ,
× RELATED ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: ஒருவர் கைது