×

டி20 அணி ஜெய்ஷா பெயரில் அறிவிப்பு: அகர்கருக்கு எதிராக ரசிகர்கள் விமர்சனம்

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சீனியர் வீரர்களான விராட் கோஹ்லி, ரோகித் சர்மா, ஜடேஜா உள்ளிட்டோர் விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். மீண்டும் ஹர்திக் பாண்டியா தலைமையிலேயே இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. துணை கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இஷான் கிஷன், சுப்மன் கில், சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் ஐபிஎல் தொடரில் அசத்திய ஜெய்ஸ்வால் மற்றும் திலக் வர்மா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ரிங்கு சிங், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஜித்தேஷ் சர்மா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்படவில்லை. இதற்கிடையில் தேர்வுக் குழு தலைவராக அஜித் அகர்கர் பொறுப்பேற்றிருந்ததால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் இந்திய அணி தேர்வு எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க முதல் நாளிலேயே சர்ச்சையில் சிக்கியுள்ளார் அஜித் அகர்கர். இந்திய டி20 அணிக்கான வீரர்கள் யார் என்ற அறிவிப்பு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பெயரில் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்திய அணியை தேர்வு செய்தது அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவா அல்லது ஜெய் ஷாவா என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா இடையிலான அட்டவணை வெளியிடப்பட்டிருந்தாலும், தனித்தனியாக அறிவித்திருக்கலாமே என்று ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். இதனால் முதல் நாளிலேயே அஜித் அகர்கர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஏற்கனவே தேர்வு குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் விவரங்களை பிசிசிஐ வெளியிடாமல் இருந்தது விமர்சனத்திற்குள்ளானது. அஜித் அகர்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மட்டுமே அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது ஜெய் ஷா பெயரில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

The post டி20 அணி ஜெய்ஷா பெயரில் அறிவிப்பு: அகர்கருக்கு எதிராக ரசிகர்கள் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : T20 ,Jaysha ,Agarkar ,Mumbai ,Indian ,West Indies ,Dinakaran ,
× RELATED உலக கோப்பை டி20 நியூசி. அணி அறிவிப்பு