×

வீராணம் ஏரியின் உபரி நீரை திறந்து விடாததால் வறண்டு கிடக்கும் சேத்தியாத்தோப்பு வெள்ளாறு

*நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் *என்எல்சியின் உபரி நீரை திறந்துவிட எதிர்பார்ப்பு

சேத்தியாத்தோப்பு : வீராணம் ஏரியின் உபரி நீரை திறந்த விடாததால் சேத்தியாத்தோப்பு வெள்ளாறு வறண்டு கிடக்கிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயம் உள்ளது. இதனால் என்எல்சியின் உபரி நீரை திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். சேத்தியாத்தோப்பு வெள்ளாறு உள்ளது. இந்த வெள்ளாற்றில் வடகிழக்கு பருவமழை காலங்களில் மட்டும் மழைநீர் வெள்ளமாக மாறி ஒரு லட்சம் கனஅடி வரை அணைக்கட்டு பாலத்தின் வழியே வடிகாலாகி கடலுக்கு சென்றடையும். அதுபோன்ற காலங்களில் சில மாதங்கள் ஆற்றில் தண்ணீர் வரத்து வந்து கொண்டே இருக்கும்.

அப்போது நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாய போர்வெல், குடியிருப்பு போர்வெல்லில் அதிகளவு தண்ணீரை வெளியேற்றும், சேத்தியாத்தோப்பு பேரூராட்சியின் 15வார்டுகளுக்கும் குடிநீருக்காக வெள்ளாற்றில் போர்வெல் போடப்பட்டு அதன்மூலம் குடிநீர் பெறப்பட்டு அனைத்து வார்டுகளுக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.

இதற்காக இரண்டு கிணறுகளை 20 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் தட்டுபாடு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளாற்றில் பேரூராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது. நீர்வரத்து குறைந்து வெள்ளாறு வறண்ட நிலைக்கு மாறும்போது நிலத்தடி நீர்மட்டம் குறைய தொடங்கிவிடும். அதுபோன்ற சமயங்களில் சென்னைக்கு குடிநீர் செல்வதற்கு முந்தைய காலகட்டங்களில் வீராணம் ஏரியிலிருந்து உபரிநீர் திறந்த விடப்படுவது வழக்கமாக இருந்தது. எப்போதும் ஆடி மாதம் வெள்ளாற்றில் வீராணம் ஏரியிலிருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டு ஓடும்.

அதனால் நிலத்தடி நீர்மட்டமும் குறைவில்லாமல் இருந்தது. பொதுமக்களும் வெயில் காலங்களில் ஆற்றுநீரில் நீராடியும், தங்களது உடைகளை துவைக்கவும் பெரிதும் வெள்ளாறு பயன்பட்டு வந்தது. மேலும் வெள்ளாற்றில் உள்நாட்டு மீனவர்கள் மீன்பிடித்து வந்ததால் அவர்களது வாழ்வாதாரமும் சிறப்பாக இருந்தது. ஆனால் தற்போது சூழ்நிலையே அடியோடு மாறிவிட்டதாக உள்நாட்டு மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சென்னைக்கு குடிநீர் செல்வதால் வெள்ளாற்றில் வீராணம் ஏரியின் உபரி நீரை திறந்துவிடுவதே இல்லை. இதனால் வெள்ளாறு வறண்டு நிலத்தடி நீர்மட்டம் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே கிளாங்காடு, சென்னிநத்தம், சக்திவிளாகம், கிராம பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் வாலாஜா ஏரிக்கு வரும் என்.எல்.சி. உபரி நீரை சில நாட்கள் வெள்ளாற்றில் திறந்துவிட வேண்டும் எனவும், தடுப்பணை கட்டி தர வேண்டும் எனவும் குடியிருப்புவாசிகளும், விவசாயிகளும் வலியுறுத்தியுள்ளனர்.

The post வீராணம் ஏரியின் உபரி நீரை திறந்து விடாததால் வறண்டு கிடக்கும் சேத்தியாத்தோப்பு வெள்ளாறு appeared first on Dinakaran.

Tags : Chethiyathoppu Vellaru ,Veeranam Lake ,Chethiyathoppu ,Dinakaran ,
× RELATED லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி