×

வீட்டில் வளர்க்கப்பட்ட ஆட்டை அடித்து புலி சாப்பிட்டது சிற்றார் வனப்பகுதியில் 10 இடங்களில் கேமரா அமைத்து கண்காணிப்பு

*தடயங்களை வனத்துறையினர் சேகரித்தனர்

அருமனை, ஜூலை 6: வீட்டில் வளர்க்கப்பட்ட ஆட்டை அடித்து சாப்பிட்டதாக தகவல் வெளியான நிலையில் சிற்றார் அரசு ரப்பர் கழக குடியிருப்பு பகுதியில் புலி நடமாட்டம் உள்ளதா என்பதை கண்டறிய 10 இடங்களில் கேமரா அமைக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் சிற்றார் அருகே அரசு ரப்பர் கழக குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியில் விஸ்வநாதன் மற்றும் அவரது மகன் ஆகியோர் கடந்த 3ம் தேதி மாலையில் பேச்சிப்பாறை அருகே வழுக்கம்பாறை என்ற இடத்தில் பஸ்சில் இருந்து இறங்கி குடியிருப்புக்கு சென்றுள்ளனர்.

அப்போது அரசு ரப்பர் கழக கோட்ட மேலாளர் அலுவலகம் அருகே புலி ஒன்றை பார்த்ததாக அந்த பகுதி மக்களிடம் தெரிவித்தனர். மேலும் அந்த பகுதியில் குடியிருந்து வருகின்ற மோகன் ராஜ் என்பவரும் இதனை போன்று அந்த பகுதியில் உள்ள மாடசாமி கோயில் அருகே வைத்து புலி ஒன்றை பார்த்ததாக கூறியுள்ளார்.இந்த தகவல்கள் காட்டுத்தீ போன்று பரவிய நிலையில் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இதனால் அந்த பகுதியில் வசிக்கின்ற பொதுமக்கள், ரப்பர் பால் வெட்டும் தொழிலாளர்கள் பீதியடைந்தனர். இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போது மலையோர பகுதியில் மழை பெய்து வருவதால் புலியின் கால்தடம், எச்சம் ஆகியவற்றை வைத்து விலங்கினத்தை உறுதி செய்ய இயலாது. மேலும் அந்த பகுதியில் புலி அல்லது சிறுத்தைக்கான பாதை உள்ளதா, அதற்கு தேவையான ஆடு, மாடு போன்ற இரை இந்த பகுதியில் உள்ளதா என்பதும் ஆராயப்பட வேண்டும். எனவே கேமரா வைத்து கண்காணித்து பதிவு கண்டறிந்த பின்னரே எந்த விலங்கினம் இந்த பகுதியில் நடமாடுகிறது என்பதை உறுதியாக கூற இயலும்’ என்று கூறியிருந்தனர்.

இதற்கிடையே சிற்றார் சிலோன் காலனி மல்லன் முத்தன்கரை காளி கோயில் அருகே ஆடு ஒன்றை புலியை உண்ணும் காட்சியை தொழிலாளி ஒருவர் நேரில் பார்த்துள்ளார். சுமார் 168 குடும்பங்கள் குடியிருக்க கூடிய பகுதி மல்லன் முத்தன்கரை ஆகும். நேற்று காலையில் தனலட்சுமி என்பவருடைய வீட்டில் வளர்க்கப்பட்ட ஆடு அதிகாலை 4.30 மணியளவில் காணாமல் போயிருந்தது. ஆட்டை யாரேனும் திருடியிருக்க கூடும் என்று தனலட்சுமி நினைத்திருந்தார். ஆனால் காலையில் ஆட்டின் இரைப்பை பகுதி காட்டின் ஒரு பகுதியில் காணப்பட்டது.

தற்போது களியல் வனச்சரகர் முகைதீன் தலைமையிலான குழு சிற்றார் வனப்பகுதியில் ஆய்வு செய்தது. அதில் ஆடு இழுத்துச் சென்ற வழித்தடங்களை பார்வையிட்டு கால் தடங்களை ஆராயும் போது புலியின் நடமாட்டம் இருப்பதையும் உறுதி செய்தனர். இதனால் அப்பகுதியில் 10 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.

இந்த கேமராக்கள் ஒரு விலங்கு அப்பகுதியில் வருகிறது என்றால் புகைப்படம் எடுப்பதும், சில நேரம் சுற்றி திரியுமாயின் 30 நிமிடத்திற்கான வீடியோ காட்சி பதிவு செய்யும் தன்மையும் வாய்ந்தது ஆகும்.அந்த வகையில் புலி நடமாட்டம் குறித்து இன்று உறுதியான தகவல் தெரிய வாய்ப்பு இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். புலி கேமராவில் சிக்கும் தருவாயில் கூண்டு அமைத்து பிடிக்கவும் வனத்துறை திட்டமிட்டுள்ளது.

The post வீட்டில் வளர்க்கப்பட்ட ஆட்டை அடித்து புலி சாப்பிட்டது சிற்றார் வனப்பகுதியில் 10 இடங்களில் கேமரா அமைத்து கண்காணிப்பு appeared first on Dinakaran.

Tags : Chittar forest ,Arumanai ,Chithar ,
× RELATED கனமழை காரணமாக குமரி நடுவே அமைந்துள்ள...