×

கிராம ஊராட்சி பெண் தலைவர்களுடன் ஆலோசனை ஊரக வேலை திட்டத்தில் ஆதி திராவிடர்களுக்கு முன்னுரிமை

*கலெக்டர் உத்தரவு

நாகர்கோவில் : குமரி மாவட்ட ஊராட்சித்துறை சார்பில் கிராம ஊராட்சி பெண் தலைவர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஊராட்சித்தலைவர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், பெண் ஊராட்சித்தலைவர்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 73- வது திருத்தத்தின்படி ஊராட்சி அமைப்புகளில் மூன்றில் ஒரு பங்கு பதவியிடம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழ்நாடு ஊராட்சிகள் திருத்தச் சட்டம் 2016-ன்படி தமிழ்நாட்டில் ஊராட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. கிராம மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது கிராம ஊராட்சிகளே ஆகும்.

கிராம ஊராட்சியில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக சுய முடிவெடுத்து தங்களது நிர்வாகத் திறனில் முத்திரை பதிப்பதோடு, உங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை முறையாக பயன்படுத்தி கிராம ஊராட்சிகளின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும். ஊராட்சி நிர்வாகத்தில் பெண் ஊராட்சித் தலைவர்கள் தங்களுடைய உறவினர்களின் தலையீடு இன்றி சுதந்திரமாக முடிவெடுத்து பணியாற்ற வேண்டும்.

சமத்துவ மயானம் செயல்படும் 3 கிராம ஊராட்சிகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் ஒரு கிராம ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் வீதம் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு விருதுத் தொகையாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலமாக வழங்கப்படுகிறது. வீடு கட்டுவதற்கு நிலம் இல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வருவாய்த்துறை மூலமாக நிலத்திற்கான பட்டா வழங்கப்படுகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 7,135 ஆதி திராவிடர் மக்களுக்கும் 709 ஆதி திராவிட பழங்குடியினர் மக்களுக்கும் ஆக 7,844 நபர்களுக்கு முழுமையாக வேலை அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

2,875 ஆதி திராவிடர் மக்களுக்கும் 114 ஆதி திராவிட பழங்குடியினர் மக்களுக்கும் ஆக 2989 நபர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. 4,855 (61.9 சதவீதம்) மக்களுக்கு வேலை வழங்கப்படாத நிலையில் ஆதிதிராவிடர் மற்றும் ஆதி திராவிட பழங்குடியின மக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்கிட விண்ணப்பிக்கப்பட்டிருப்பின் உடனடியாக முன்னுரிமை வழங்கி வேலை வழங்கிட வேண்டும்.

செயல்படுத்தப்படும் திட்டங்களின் வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் ஆதி திராவிடர், ஆதிதிராவிட பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் பணிகள் தேர்வு செய்வது உறுதி செய்யப்படவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.கூட்டத்தில் உதவி இயக்குநர் (கிராம ஊராட்சிகள்) சாந்தி, இந்தியன் வங்கி மேலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்(கி.ஊ), பெண் ஊராட்சித்தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post கிராம ஊராட்சி பெண் தலைவர்களுடன் ஆலோசனை ஊரக வேலை திட்டத்தில் ஆதி திராவிடர்களுக்கு முன்னுரிமை appeared first on Dinakaran.

Tags : Adi Dravidians ,Nagercoil ,Kumari ,Adi Dravidas ,
× RELATED கன்னிப்பூ சாகுபடி பணிக்கு கோடை மழையை எதிர்நோக்கும் விவசாயிகள்