×

உறையூர், செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்தது என்ன?.. பதிவுத்துறை தலைவர் விளக்கம்

சென்னை: உறையூர், செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்தது என்ன என பதிவுத்துறை தலைவர் விளக்கம் அளித்துள்ளார். வருமான வரி சட்டம் பிரிவு 285 BA மற்றும் விதி 114 E ன்படி ஒவ்வொரு நிதி ஆண்டு முடிவடைந்ததும் ரூ 30 லட்சத்திற்கு மேற்பட்ட மதிப்பு கொண்ட விற்பனை ஆவணங்களைப் பொறுத்து விற்பவர், வாங்குபவர், ஆதார்எண், PAN எண், சொத்தின் தன்மை, சொத்தின் மதிப்பு போன்ற விவரங்கள் பதிவு அலுவலர்களால் வருமான வரித்துறை இணைய தளத்தில் மேலேற்றம் செய்யப்படுகிறது. இது படிவம் 61A என அழைக்கப் படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இவ்விவரங்கள் தவறாமல் மேலேற்றம் செய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை மூலம் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மேற்கண்ட விவரங்கள் வருடந்தோறும் ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் அந்தந்த பதிவு அலுவலரால் வருமான வரித்துறை இணைய தளத்தில் மேலேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்நிதியாண்டு முடிவடைந்த இரண்டு மாதத்திற்குள் எந்தெந்த சார்பதிவாளர்கள் இந்த அறிக்கையை மேலேற்றம் செய்தார்கள் என்ற விவரத்தை பதிவுத்துறை தலைவருக்கு தெரிவிக்கும் நடைமுறை வருமான வரித்துறையால் பின்பற்றப் படாதநிலையில் மேலேற்றம் செய்யப்படாத விவரங்கள் குறித்து அவ்வப்போது வருமான வரித்துறையால் நினைவூட்டுகள் பதிவுத்துறை தலைவருக்கு அனுப்பப்படுவதும் அதன்மீது பதிவுத்துறை தலைவர் உரிய மேல் நடவடிக்கை எடுப்பதும் வழக்கத்தில் உள்ளது. வருடாந்திர அறிக்கை மட்டுமல்லாது ரூ.30 இலட்சத்திற்கு மேல் மதிப்பு கொண்ட விற்பனை ஆவணங்கள், ரூ.10 இலட்சத்திற்கு மேல் மதிப்பு கொண்ட விற்பனை ஆவணங்கள் போன்றவற்றின் விவரங்களும் வருமான வரித்துறையினரால் பதிவுத்துறை தலைவரிடம் அவ்வப்போது கோரப்படும்.

இந்த விவரங்கள் மையக்கணினியில் இருந்து எடுக்கப்பட்டு வழங்கப்படும். இதன் மூலம் சார்பதிவாளர் மேலேற்றம் செய்த படிவம் 61A வில் ஏதேனும் விடுதல்கள் உள்ளதா என்ற விவரம் வருமான வரித்துறையால் சரிபார்க்கப்படும். இவ்வாறு மேலேற்றம் செய்ய தேவையான தகவல்களை ஆவணம் பதிவு செய்ய முன்பதிவு செய்யும் முன்பே ஆவணதரர்களிடமிருந்து பெறும் வகையில் பதிவுத்துறையின் ஸ்டார் 2.0 மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூ 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விற்பனை ஆவணங்கள் பதிவிற்கு வரும் நிலையில் விற்பவர் மற்றும் வாங்குபவரிடமிருந்து PAN எண்பெறப்படுகிறது. PAN எண் இல்லாதவர்கள் வருமானவரி சட்டத்தின்படி படிவம் 60 அளிக்கவேண்டும். இவ்விவரமும் மென்பொருள் வழியே சேகரிக்கப் படுகிறது. மேலும் ரூ 30 லட்சத்திற்கு மேற்பட்ட விற்பனை ஆவணங்களைப் பொறுத்து விற்பவர், வாங்குபவர், ஆதார்எண், PAN எண், சொத்தின் தன்மை, சொத்தின் மதிப்பு போன்ற கூடுதல் விவரங்கள் ஸ்டார் 2.0 மென்பொருள் வழி சேகரிக்கப்படுகிறது.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட விவரங்கள் அந்நிதியாண்டு முடிவடைந்ததும் வருமான வரித்துறை இணைய தளத்தில் சார்பதிவாளரால் மேலேற்றம் செய்யப்படும். மேலும், பதிவு பணிகள் மேற்கொள்ளும்போது விற்பனை செய்பவர் மற்றும் சொத்தினை வாங்குபவர்களின் ஆதார் எண் பெறப்பட்டு, அதனை நிகழ்நேரத்தில் (Real Time), UIDAI ஆதார் தரவுடன் ஸ்டார் 2.0 மென்பொருள் மூலமாக சரிபார்க்கப்படுகிறது. ஆதார் எண்ணுடன் PAN எண் இணைக்கப்பட்டுள்ளதால் பதிவு தொடர்பான தகவல்கள் அனைத்தும் வருமான வரித்துறைக்கு வழங்கும் வகையில் பதிவுத்துறை மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. 04.07.2023 அன்று திருச்சி பதிவு மாவட்டம் உறையூர் சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் திருவள்ளூர் பதிவு மாவட்டம் ரெட்ஹில்ஸ் சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றிற்கு வருமான வரித்துறையினர் நேரில் வந்தனர். 2017-2018 ம் நிதி ஆண்டிலிருந்து பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் விவரங்கள் அவர்களால் கோரபட்டதற்கு இணங்க வழங்கப்பட்டன.

தேவையான தகவல்களை நேரில் சரிபார்க்கவும் அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. இவ்விரு அலுவலகங்கள் குறித்தும் கூடுதல் விவரங்கள் வருமான வரித்துறையினரால் அந்தந்த சார்பதிவாளர்களிடம் கோரப்பட்டுள்ளது. இவ்விபரங்கள் விரைவில் வருமான வரித்துறைக்கு அனுப்பப்படும். மேலும் உரிய காலத்திற்குள் இவ்விவரங்களை மேலேற்றம் செய்யாத இவ்விரு அலுவலகங்களின் சார்பதிவாளர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து சார்பதிவாளர்களும் 61A விவரங்களை வருமான வரித்துறையின் இணைய தளத்தில் உரிய காலத்திற்குள் மேலேற்றம் செய்ய வேண்டுமென கண்டிப்பான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

The post உறையூர், செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்தது என்ன?.. பதிவுத்துறை தலைவர் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Sengkundam Dependency ,Ubrayyur ,Chennai ,Sengkunnam, Chennai ,Udhaiyur ,Sengkundam Dependent ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...