×

ஒடுகத்தூரில் 12 மலை கிராம மக்கள் நடத்தினர் பாரம்பரிய எருது கட்டு ஆட்டம் வினோத திருவிழா

*காளைகளை விரட்டிய இளைஞர்கள்

ஒடுகத்தூர் : ஒடுகத்தூரில் 12 மலை கிராம மக்கள் நடத்திய பாரம்பரிய எருது கட்டு ஆட்டம் என்ற வினோத திருவிழா நடந்தது. இதில் பங்கேற்ற இளைஞர்கள் காளைகளை விரட்டினர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்டு சுமார் 47 குக்கிராமங்கள் உள்ளது. இதில் கட்டியான், அரசன், கோரி, தண்டன், வரடியான், பாவிரன், நாடான் உள்ளிட்ட பல்வேறு வகையான மலைவாழ் மக்கள் தங்களின் வாழ்க்கை முறை மாறாமல் வாழ்கின்றனர்.

இவர்களில் ஜமுனாமரத்தூர் மலை கிராமத்தை பூர்வீகமாக கொண்ட மலைவாழ் மக்கள் பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட கட்டியாபட்டு, தேந்தூர், புதூர், புளியமரத்தூர், கோராத்தூர், சட்டாத்தூர், குப்சூர் என 12 கிராமங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

இவர்களின் பாரம்பரிய திருவிழாக்களான புற்று கோயில் திருவிழா, காட்டு காளியம்மன் திருவிழா ஆகியவை ஒரே மாதத்தில் அடுத்தடுத்து நடைபெறுகிறது. இந்த திருவிழாக்கள் அனைத்துமே பெரும்பாலும் இரவு நேரங்களில் மட்டுமே கொண்டாடப்படுகிறது. அதன்படி, கடந்த மாதம் 15ம்தேதி பெருமாள் வடிவிலான புற்று கோயில் திருவிழா கொண்டாடினர். 29ம்தேதி 100 ஆடுகளை பலியிட்டு காட்டு காளியம்மன் திருவிழா நடந்தது.

அதன் தொடர்ச்சியாக நேற்று 12 கிராமங்களின் பாரம்பரிய திருவிழாவான எருது கட்டு ஆட்டம் என்ற வினோத திருவிழா கட்டியாபட்டு கிராமத்தில் கொண்டாடப்பட்டது. இதற்காக சுற்றியுள்ள மலை கிராமங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகளை அங்கு அமைக்கப்பட்ட 3 பெரிய மந்தையில் அடைத்து வைத்தனர். பின்னர், இளைஞர்கள் ஊர் பெரியோர்களின் காலில் விழுந்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, மந்தையில் அடைத்து வைத்திருந்த காளைகளை ஒவ்வொன்றாக கயிறு கட்டி மைதானத்தில் ஓட விட்டு விரட்டினர்.

இதில், 100க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டது. இந்த திருவிழாவை காண சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மலைவாழ் மக்கள் திரண்டு வந்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

நாகரீகம் வளர்ந்தாலும் பாரம்பரிய வழிபாடுகள் மாறாது

இந்த நூதன வழிபாடு குறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், ‘சுதந்திரம் அடைவதற்கு முன்பிலிருந்தே எங்கள் முன்னோர்கள் இந்த காடுகளில் வாழ்ந்தவர்கள். அவர்கள் காட்டிய வழியில் தான் நாங்கள் இன்று வரை அதை கடைபிடித்து வருகிறோம். எங்கள் முன்னோர்கள் எங்களுக்கு கற்றுக் கொடுத்த கலாச்சாரம், மரபு, தெய்வ வழிபாடுகளை நாங்கள் வரும் தலைமுறைக்கு அப்படியே கற்றுக் கொடுக்கிறோம். நாகரீகம் வளர்ந்தாலும் எங்கள் பாரம்பரிய வழிபாடுகள் என்றும் மாறாது’ என்றனர்.

The post ஒடுகத்தூரில் 12 மலை கிராம மக்கள் நடத்தினர் பாரம்பரிய எருது கட்டு ஆட்டம் வினோத திருவிழா appeared first on Dinakaran.

Tags : Odugathur ,Ox Kadu Atom Bizarya festival ,Odugattur ,Ox Battu Atom ,Ox Bandu Aatam Bizaratha festival ,Odugatur ,
× RELATED ஒடுகத்தூர் அருகே வனப்பகுதியில்...