×

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை 2 மருத்துவர்கள், ஒரு இன்ஜினியர் கைது

பாகூர், ஜூலை 6: புதுவையில் கஞ்சாவை ஒழிக்க வேண்டி ஆபரேஷன் விடியல் என்ற பெயரில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கிருமாம்பாக்கம் அருகே சார்காசிமேடு செல்லும் சாலையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் ரமேஷ், பாகூர் இன்ஸ்பெக்டர் கணேஷ் மற்றும் போலீசார் நேற்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்குள்ள தனியார் மருத்துவ கல்லூரி அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த வாலிபர்கள் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் சோதனையிட்டனர். அப்போது, சிறு சிறு பொட்டலமாக கஞ்சா பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. தீவிர விசாரணையில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த குற்றாலீஸ்வரன்(29) பல் டாக்டர். கோரிமேடு பிரியதர்ஷினி நகரை சேர்ந்த கார்த்திகேயன்(26) எம்.பி.பி.எஸ்., முடித்து இருப்பதும், கடலூர் அடுத்துள்ள அன்னவல்லி கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார்(29). இன்ஜினியர் படித்து இருப்பது தெரியவந்தது.

இவர்கள் அனைவரும் புதுவை கல்லூரிகளில் படித்தவர்கள். மருத்துவம் படித்த குற்றவாலீஸ்வரன், கார்த்திகேயன் இருவரும் கஞ்சாவுக்கு அடிமையாகி வேலைக்கு போகாமல் இருந்து வந்துள்ளனர். அவர்கள் இருவரும் சென்னையில் இருந்த கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. இவர்களுக்கு, ரெட்டிச்சாவடியில் டீ கடை நடத்தி வரும் ரவிக்குமார் புரோக்கராக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்து, ஒரு கிலோ கஞ்சா, 21,500 ரூபாய், 3 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை 2 மருத்துவர்கள், ஒரு இன்ஜினியர் கைது appeared first on Dinakaran.

Tags : Bagur ,Puduwai ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை