×

விபத்தில் பலியான மகன் உடலை பார்த்து கதறிய தந்தை உயிரிழப்பு: சோகத்தில் மூழ்கியது கிராமம்

சென்னை: ஆவடி அடுத்த பாலவேடு காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (42). இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 2ம் தேதி இரவு 10 மணி அளவில், திருநின்றவூரில் இருந்து பாக்கம் பகுதியை நோக்கி பைக்கில் சென்றுள்ளார். அப்போது, பின்னால் வந்துகொண்டிருந்த திருவள்ளூர் மாவட்டம் அம்மணம்பாக்கம் பகுதியை சேர்ந்த சங்கரன் (39) என்பவரின் கார், அசோக்குமாரின் பைக் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

சாலையில் ரத்தவெள்ளத்தில் துடித்த அசோக்குமாரை அப்பகுதியினர் மீட்டு உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் அசோக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, விபத்து ஏற்படுத்திய சங்கரன் மீது பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, பிரேத பரிசோதனைக்கு பிறகு அசோக்குமாரின் உடல் அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. உடலை அடக்கம் செய்வதற்கான இறுதி சடங்குகள் நடந்தபோது, மகனின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதுக் கொண்டிருந்தனர். அசோக்குமாரின் தந்தை குப்பன் (65) மிகுந்த சோர்வுடன் அழுதுகொண்டிருந்தார். அப்போது திடீரென குப்பன் நெஞ்சை பிடித்தப்படி சாய்ந்து விழுந்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக குப்பனை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றபோது பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் உறவினர்கள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். மகன் விபத்தில் சிக்கி இறந்ததை தாங்க முடியாமல் தந்தையும் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததால் கிராமமே மிகுந்த சோகத்தில் மூழ்கியது.

The post விபத்தில் பலியான மகன் உடலை பார்த்து கதறிய தந்தை உயிரிழப்பு: சோகத்தில் மூழ்கியது கிராமம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Ashokumar ,Gandhinagar ,Balavedu ,Avadi ,Ambattur ,Dinakaran ,
× RELATED குத்தாலம் காந்திநகர் பாலசுப்பிரமணிய...