
விழுப்புரம்: பாலியல் வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். தமிழகத்தில் கடந்த 2021 பிப்ரவரி மாதம் அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், பெண் எஸ்பி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிந்தனர். இவ்வழக்கு விசாரணை நிறைவு பெற்று கடந்த ஜூன் 16ம் தேதி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி தீர்ப்பு வழங்கினார். இதில் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20,500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
மேலும் உடந்தையாக இருந்த செங்கல்பட்டு எஸ்பி கண்ணனுக்கு தடுத்து நிறுத்துதல் பிரிவின் கீழ் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு டிஜிபி ஜாமீன் பெற்றார். கடந்த ஜூன் 23ம் தேதி எஸ்பி கண்ணன் தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில் நேற்று சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் கீழ் கோர்ட் விதித்த தண்டனையை எதிர்த்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த 2 மனுக்களும் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post பாலியல் வழக்கில் 3 ஆண்டு சிறை மாஜி டிஜிபி மேல்முறையீடு appeared first on Dinakaran.