×

விம்கோ நகர் ரயில் நிலையத்தில் பரபரப்பு பட்டாக்கத்தி, பாட்டில்களுடன் கல்லூரி மாணவர்கள் மோதல்: ஜன்னல் கண்ணாடிகள் நொறுக்கின

* குழந்தை உள்பட 3 பேர் காயம்

திருவொற்றியூர்: விம்கோ நகர் ரயில் நிலையத்தில் பட்டாக் கத்தி, பாட்டில்களுடன் கல்லூரி மாணவர்கள் பயங்கர மோதலில் ஈடுபட்டனர். இதில் ரயில் ஜன்னல் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. குழந்தை உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். சென்னை சென்ட்ரலில் இருந்து சூலூர்பேட்டைக்கு புறநகர் மின்சார ரயில் நேற்று பிற்பகல் 3.45மணிக்கு புறப்பட்டது. அப்போது 3வது பெட்டியில் பயணித்த சில கல்லூரி மாணவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திருவொற்றியூர் அடுத்த விம்கோ நகர் ரயில் நிலையத்தில் ரயில் வந்து நின்றதும் மாணவர்களில் ஒரு பிரிவினர் கீழே இறங்கினர். பின்னர் ரயில் புறப்பட்டபோது, திடீரென்று பெட்டிக்குள் இருந்தவர்களும், வெளியே இருந்தவர்களும் ஒருவரை ஒருவர் பட்டாக்கத்தி மற்றும் பாட்டில்களால் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

இதில் ரயில் பெட்டியின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் பெட்டியில் அமர்ந்திருந்த பயணிகள் அலறியடித்து அங்கும் அங்கும் ஓடினர். தொடர்ந்து கத்திவாக்கம் ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும் தகவல் அறிந்த ரயில்வே போலீசார் 3வது பெட்டிக்கு விரைந்து வந்தனர். அதற்குள் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் இறங்கி ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தில் பெட்டியில் இருந்த ஒரு குழந்தை மற்றும் 2 பெண்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் 3வது பெட்டியில் இருந்த பயணிகளை வேறு பெட்டிக்கு இடமாற்றம் செய்து அந்த பெட்டியின் கதவை மூடினர். இந்த மோதலில் ஈடுபட்டவர்கள் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்கள் என்று கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் விம்கோ நகர் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post விம்கோ நகர் ரயில் நிலையத்தில் பரபரப்பு பட்டாக்கத்தி, பாட்டில்களுடன் கல்லூரி மாணவர்கள் மோதல்: ஜன்னல் கண்ணாடிகள் நொறுக்கின appeared first on Dinakaran.

Tags : Vimco Nagar ,railway ,station ,Tiruvottiyur ,Vimco Nagar railway station ,
× RELATED பீஹார் கியூல் ரயில்வே ஸ்டேஷனில் நின்றிருந்த ரயிலில் தீ விபத்து