×

யானைகள் மரணத்தை தடுக்க தேசிய திட்டம் கோரிய வழக்கு உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

புதுடெல்லி: கேரளாவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளரும், இயற்கை ஆர்வலருமான நீலகண்டன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து யானைகள் மனித மோதல்கள் அதிகரித்து வருகிறது. இதில் ஏராளமான யானைகள் கொல்லப்படுகிறது. மேலும் உணவு பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும் யானைகள் உயிரிழந்து வருகிறது. எனவே யானைகளை பாதுகாக்க புலிகள் பாதுகாப்பு திட்டம் இருப்பது போன்று தேசிய அளவிலான யானைகள் பாதுகாப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும். அதற்கான உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மேற்கண்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே இதுபோன்று உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் நிலுவையில் உள்ளது. இந்த விஷயத்தில் நாங்கள் தலையிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா?. இதுபோன்ற வழக்குகளை பார்ப்பதற்காக தான் உயர்நீதிமன்றங்கள் இருக்கிறது என தலைமை நீதிபதி கேள்வியெழுப்பினார். இதைத்தொடர்ந்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,‘‘யானைகளை ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாற்றுவதற்கு ஏராளமான செலவுகள் ஆகின்றது. சமீபத்தில் கூட அரிக்கொம்பன் யானை விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு பெரும் செலவு ஏற்பட்டது என மனுதாரர் வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, இத்தகைய விவகாரங்களில் சட்டத்தின் கீழ் மாற்று வழிகள் இருப்பதால் இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. மனுதாரருக்கு ஏதேனும் நிவாரணம் தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட துறையை அணுகலாம் எனக்கூறி மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

The post யானைகள் மரணத்தை தடுக்க தேசிய திட்டம் கோரிய வழக்கு உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Neelakandan ,Kerala ,
× RELATED பல்வேறு முறைகேடுகளுடன் நடந்து...