×

காலத்தின் சுழற்சியால் காட்சிகள் மாறியது; முடங்கி கிடக்கும் மாட்டு வண்டிகள்: தொழிலாளர்கள் குமுறல்

சேலம்: மோட்டார் வாகனங்களின் பெருக்கத்தால் மாட்டு வண்டிகள் மீதான மக்களின் ஆர்வம் குறைந்து விட்டது. ஆனாலும் பாரம்பரிய அடையாளமாக இதை தொடர்ந்து கொண்டிருக்கிறோம் என்று தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பண்டை காலத்தில் மனிதர்கள் நடந்தே ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்றனர். அடர்ந்த வனப்பகுதிகளின் கரடு,முரடான பாதைகளில் தலைச்சுமையாகவே பொருட்களை எடுத்துச்சென்றனர். இதன்பிறகு வீடு்்களில் மாடுகள், குதிரைகள் போன்ற கால்நடைகளை வளர்க்க ஆரம்பித்தனர். இதன் தொடர்ச்சியாக அவற்றின் மீது பொதிகளை ஏற்றி கொண்டு செல்ல ஆரம்பித்தனர். காலப்போக்கில் இதில் ஒரு புதிய பரிமாணமாக குதிரைகள், மாடுகள் பூட்டிய வண்டிகளை பயன்படுத்த ஆரம்பித்தனர். இதில் ஆரம்பகாலத்தில் காளைமாடுகள் பூட்டிய மாட்டு வண்டிகளே அதிகளவில் பயன்படுத்தப்பட்டன.

வியாபாரத்திற்காகவும், இடமாற்றத்திற்காகவும் இந்த வண்டிகளில் பொருட்களை ஏற்றிச்செல்ல ஆரம்பித்தனர். இதற்காக வீடுகளில் பிரத்யேகமாக காளைமாடுகள் வளர்க்கப்பட்டன. இதேபோல் அந்தக்காலத்தில் மாட்டு வண்டிகள், ஒருவரின் அந்தஸ்துக்கு அடையாளமாகவும் இருந்தது. ஜமீன்தார்கள் அலங்கரித்த மாட்டு வண்டிகளில் ஜல்ஜல் சத்தத்தோடு சலங்கை பூட்டிய மாட்டு வண்டிகளில் பயணித்தனர். புதுமணத்தம்பதிகள் வைக்கோல் பரப்பி ஜமக்காளம் விரித்த மாட்டு வண்டிகளில் விருந்து நிகழ்ச்சிகளுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். கல்யாணவீட்டார், கட்டைமாட்டு வண்டியில் குடும்பத்துடன் கோலாகலமாக செல்வார்கள். வசதி படைத்தவர்கள் கூண்டு கட்டிய மாட்டு மண்டி வைத்திருப்பார்கள். வீட்டின் பின்புறத்தில் கட்டப்பட்டிருக்கும் மாடுகள் வாசலுக்கு வந்துநின்றால், அந்த குடும்பத்தில் இருப்பவர்கள், வெளியில் எங்கோ பயணம் செய்ய ஆயத்தமாகிறார்கள் என்பதை ஊரார் உணர்ந்து கொள்வர்.

இப்படி சுவாரஸ்யம் நிறைந்த மாட்டுவண்டிகளின் பயன்பாடு, காலத்தின் சுழற்சியால் இப்போது அடியோடு மறைந்து வருகிறது. ஆங்காங்கே பல்லாண்டு நினைவுகளை தாங்கிநிற்கும் மாடுகளும், வண்டிகளும் மக்களின் பார்வையில் இருந்து விலகி நிற்பதால் அழிவின் பிடியில் சிக்கி வருகிறது. இது குறித்து சேலத்தை சேர்ந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள் கூறியதாவது: ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும், பழைய பாரம்பரியத்தை மறக்கச்செய்யும் என்பது பொதுவான விதி. இந்தவகையில் ரிக்‌ஷாக்களின் வருகை மாட்டு வண்டிகளை மட்டுப்படுத்தியதற்கு ஒரு முக்கிய காரணம். சேலம் மாவட்டத்தில் 30ஆண்டுகளுக்கு முன்பு தாதகாப்பட்டி, செவ்வாய்பேட்டை, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி என்று பல்வேறு பகுதிகளில் பரபரப்பான மாட்டு வண்டி நிறுத்தங்கள் இருந்தன. குறிப்பாக வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த செவ்வாய்பேட்டை பகுதியில் மளிகை பொருட்களை ஏற்றி இறக்குவதற்கு மாட்டு வண்டிகளே பிரதானமாக பயன்பட்டது.

இதேபோல் நூற்பாலைகள், தொழிற்சாலைகள், தறிக்கூடங்களில் இருந்து கனமான பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் மாட்டு வண்டியை மக்கள் வாடகைக்கு எடுத்தனர். ஆனால் இப்போது புற்றீசல் போல வந்துள்ள ஆட்டோக்கள், கூப்பிட்ட இடத்திற்கே வரும் சரக்கு வாகனங்கள் போன்றவற்றால் மாட்டு வண்டிகள் மீதான மக்களின் ஆர்வம் வெகுவாக குறைந்து விட்டது. இருந்தாலும் இந்ததொழிலை நம்பி இன்றும் பலகுடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் வாடகை கிடைப்பது என்பது அரிதாகவே உள்ளது. பல ஆண்டுகளாக உள்ள பழக்கத்தை கருத்தில் கொண்டு ஒரு சிலர் மட்டுமே, மாட்டு வண்டிகளை வாடகைக்கு அழைக்கின்றனர். இதனால் ஒரு காலத்தில் நூற்றுக்கணக்கில் இருந்த மாட்டு வண்டிகளின் எண்ணிக்கை தற்போது இரட்டை இலக்கத்தில் மட்டுமே உள்ளது.

இதில் மாடுகளை பராமரிப்பது, தீவனம் தருவது போன்ற செலவுகளும் முன்பை விட அதிகரித்து விட்டது. இருந்தாலும் எங்களுக்கு முன்னோர் தந்த இந்த பாரம்பரிய தொழிலை மறந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் மாட்டு வண்டிகளை ஓட்டி வருகிறோம். நவீன இயந்திரவண்டிகள் மீது ஆர்வம் கொண்ட மக்கள், அவ்வப்போது மாட்டு வண்டிகளுக்கும் வாய்ப்பு தரவேண்டும். சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத மாட்டு வண்டிகளின் பெருமை குறித்து தங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக்கூற வேண்டும். இதுபோன்ற செயல்கள், சோர்ந்து கிடக்கும் மாட்டு வண்டிகளை சுறுசுறுப்புடன் ஓடச்செய்யும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

* ஜமீன்தார்கள் அலங்கரித்த மாட்டு வண்டிகளில் ‘ஜல் ஜல்’ சத்தத்தோடு சலங்கை பூட்டிய மாட்டு வண்டிகளில் பயணித்தனர்.
* சுவாரஸ்யம் நிறைந்த மாட்டுவண்டிகளின் பயன்பாடு, காலத்தின் சுழற்சியால் இப்போது அடியோடு மறைந்து வருகிறது.
* நவீன இயந்திரவண்டிகள் மீது ஆர்வம் கொண்ட மக்கள், அவ்வப்போது மாட்டு வண்டிகளுக்கும் வாய்ப்பு தரவேண்டும்.

The post காலத்தின் சுழற்சியால் காட்சிகள் மாறியது; முடங்கி கிடக்கும் மாட்டு வண்டிகள்: தொழிலாளர்கள் குமுறல் appeared first on Dinakaran.

Tags : Salem ,Kumal ,
× RELATED குப்பைக்கழிவால் துர்நாற்றம்